OUR CLIENTS
குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்
குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன் Posted on 06-Dec-2018 குட்கா முறைகேடு வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்

குட்கா முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் செந்தில் முருகன், சிவக்குமார், மத்திய கலால் வரித்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு, சென்னை சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கில், குற்றப்பத்திரிக்கை ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது கட்ட விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒருபகுதியாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் நேற்று நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். நேற்று அவர் ஆஜராகாத நிலையில், நாளை காலை 10 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சரவணனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல, அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத குட்கா விற்பனைக்காக, மாதாமாதம் லஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான குறிப்புகள் மாதவராவ் டைரியில் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் ஏற்கெனவே மாதவராவிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளரிடம் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

Label