OUR CLIENTS
சோனியாகாந்தி பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
சோனியாகாந்தி பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து Posted on 10-Dec-2018 சோனியாகாந்தி பிறந்தநாள் மு.க.ஸ்டாலின்  நேரில் வாழ்த்து

புதுடெல்லி, டிச.10-

சோனியா காந்தியின் பிறந்தநாளினை முன்னிட்டு, அவருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சால்வை அணிவித்து, பூங்கொத்து அளித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின், நேற்று (9-12-2018) காலை, புதுடெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்திற்கு நேரில் சென்று, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததுடன், திமுக தலைவர் கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவின் அழைப்பிதழையும் அளித்தார்.
மு.க. ஸ்டாலின் சோனியாவுக்கு "பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி"யையும் வெளியிட்டார். விவரம் வருமாறு: "72ஆவது பிறந்தநாள் கொண்டாடும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியாகாந்தி அம்மையார் அவர்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் கலைஞர் அவர்களின் மீது மாறாத பற்றும் பாசமும்  கொண்ட அவர், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அமைந்தவுடன் தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று, தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கிடும் வண்ணம், செந்தமிழ் மொழியைச்  செம்மொழியே எனப் பிரகடனப் படுத்துவதற்கு மிகவலிமையான அடித்தளம் அமைத்தவர்.
மதச்சார்பின்மைக் கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்ட அவர், நாட்டின் பொதுநலன் கருதியும், அனைவருடைய பொதுவான நோக்கங்களுக்கு வடிவமைப்பு கொடுத்திடும் வகையிலும், அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பிற்குத் தூண்டுகோலாகவும் உற்ற பெருந்துணையாகவும் இருந்து வருகிறார். பிளவுபடுத்தும் பிற்போக்கு சக்திகளைப் புறங்காணும் கனிவும், துணிவும், தெளிவும் மிக்க செயல்பாடுகளும் கொண்ட அன்னை சோனியா அவர்கள், நலமோடும் மகிழ்வோடும் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து, இந்தியத் திருநாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உகந்த வழிகாட்டிட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்!" இவ்வாறு, திமுக தலைவர்  பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சோனியா காந்தி, ஸ்டாலின் சந்திப்பின்போது, அகில காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ராகுல்காந்தி, திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கனிமொழி, எம்.பி., கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, காவிரியின் குறுக்கே, கர்நாடகா அரசு "மேகதாது அணை" கட்டுவது குறித்து, சோனியா காந்தியிடமும், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியிடமும் ஸ்டாலின் பேசினார்.
திமுக முன்னாள் தலைவர் மறைந்த மு. கருணாநிதியின் உருவச் சிலையினை வருகிற 16-12-2018 அன்று, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி திறந்து வைக்கும் விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் சோனியா கலந்துகொள்வது குறித்த அழைப்பிதழை மு.க. ஸ்டாலின் சோனியாவிடம் அளித்தார்.

Label