OUR CLIENTS
மதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை என புகார்!
மதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை என புகார்! Posted on 11-Dec-2018 மதுரை சிறையில் அதிகரிக்கும் கைதிகள் உயிரிழப்பு சத்தான உணவு, தரமான சிகிச்சை இல்லை என புகார்!

மதுரை, டிச.11-

சத்தான உணவு, உரிய சிகிச்சை இல்லாததால் மதுரை மத்திய சிறையில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கைதிகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதேநிலை பிற சிறைகளிலும் நிலவுவதாகக் கூறப்படுகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்கும் விதமாகவும், அதேநேரத்தில் அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்திக் கொள்வதற்கான இடமாகவும் சிறைச்சாலைகள் அமைந்துள்ளன. ஆனால், எதார்த்த நிலை அவ்வாறு இல்லை என்பதே உண்மை. சிறைகளில் ஆள் பலம், பண பலம், அதிகார பலம் படைத்த கைதிகள் வைத்ததே சட்டம் என்பதாக உள்ளது. பணம் படைத்தவர்களுக்கு சிறைகள் சொர்க்கமாகவும், பணமில்லாதவர்களுக்கு நரகமாகவும் உள்ளன. சிறை நிர்வாகங்களும் அதிகார பலம் படைத்த கைதிகளுக்கு மட்டுமே அனைத்து சலுகைகளையும் வழங்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
சந்தர்ப்ப சூழல் காரணமாக செய்த குற்றத்துக்குத் தண்டனை பெற்றுள்ள சாதாரண கைதிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள்கூட சிறையில் அளிக்கப்படுவது இல்லை. மேலும் இவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் கூட உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதும் இல்லை. இதனால் தமிழக சிறைகளில் ஆண்டுதோறும் பல கைதிகள் உரிய சிகிச்சையின்றி உயிரிழக்கின்றனர்.
 மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
 மதுரை மத்திய சிறை, ஆங்கிலேயர் காலத்தில் 1865-ஆம் ஆண்டு 34 ஏக்கரில் அமைக்கப்பட்டது. தற்போது 4 மரண தண்டனை கைதிகள், 236 ஆயுள் கைதிகள், 103 நீண்ட நாள் சிறைக் கைதிகள், 21 குறுகிய கால தண்டனை கைதிகள், 168 விசாரணைக் கைதிகள் உள்பட மொத்தம் 1,168 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்கள், முதல் தலைமைக் காவலர்கள், தலைமைக் காவலர்கள், இரண்டாம் நிலைக் காவலர்கள் உள்பட 223 பேர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
மத்திய சிறையில் உடல்நலம் பாதிக்கப்படும் சிறைக் கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறை வளாகத்திலேயே மருத்துவமனையும் இயங்கி வருகிறது. சிறையில் 1168 பேர் இருக்கும் நிலையில், சிறை மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். மேலும் மனநல ஆலோசகர் ஒருவரும் பணியில் உள்ளார். மேல் சிகிச்சை தேவைப்படும் கைதிகளுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பாதுகாப்புடன் கூடிய வார்டுகளும் உள்ளன.
கைதிகளுக்கு வாரம் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் கோழி இறைச்சி வழங்கப்படுகிறது. இதர நாள்களில் காலை உணவாக அரிசி கஞ்சி, அரிசி உப்புமா, வெண் பொங்கல் போன்றவையும், மதிய உணவாக புளி சாதம், தேங்காய் சாதம், சாம்பார், பொரியல், மோர் போன்றவையும், இரவு உணவாக சாதம், சாம்பார், நிலக்கடலை போன்றவையும் சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. 1168 கைதிகளுக்கும் சமையல் செய்யும் பணியில் இரண்டு சமையலர்கள் மட்டுமே உள்ளனர். சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி மற்றும் சிறை வளாகத்தை சுத்தம் செய்ய சுகாதாரப் பணியாளர்கள் இருவர் உள்ளனர்.
சிறைக் கைதிகளுக்கு உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக ஒவ்வோர் ஆண்டும் அரசு லட்சக்கணக்கில் செலவழிக்கிறது. இருப்பினும் அவை முழுமையாக சென்றடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை சிறையில் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Label