OUR CLIENTS
பத்திரிகையாளர்கள் மீது பொய் புகார் கொடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் வலியுறுத்தல்
பத்திரிகையாளர்கள் மீது பொய் புகார் கொடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் வலியுறுத்தல் Posted on 12-Dec-2018 பத்திரிகையாளர்கள் மீது பொய் புகார் கொடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ஜேயூ தேசிய தலைவர் கா.குமார் வலியுறுத்தல்

வேலூர், டிச.12-

பத்திரிகையாளர்கள் மீது பொய் புகார் கொடுத்து மிரட்டுபவர்கள் மீது தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செய்தியாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத சூழல் பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது. பலர் தங்களது இன்னுயிரை இழந்தும் உள்ளனர். இப்படி விலைமதிப்பில்லாத உயிரை பலர் இழந்தும் அரசு மௌனமாக இருக்கிறது. செய்தியாளர்கள் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக எழுதவோ, வெளியிடவோ பல அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருந்து கொண்டே உள்ளது. சமூக விரோதிகள் முகத்திரையை கிழித்தால் போதும் அவர்கள் காவல் துறையை நாடி பொய் புகார் கொடுத்து தங்களை மிரட்டுவதாக கூறி உண்மையான செய்தியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். காவல் துறையில் உள்ள சிலர் எந்தவித முகாந்திரமும் இல்லாத வழக்காக இருந்தாலும் அதை தெரிந்து கொண்டே பொய் புகார் மீது வழக்குப்பதிவு செய்து அந்த செய்தியாளரை இழிவுபடுத்தும் அநாகரீக செயலில் தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபடுகின்றனர். இப்படி செய்தியாளர்கள் மீது பொய்ப்புகார்கள் கொடுப்பவர்கள் மீது தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். 
பலவகையான செய்திகளை சேகரிக்க செல்லும் இடமெல்லாம் செய்தியாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஒருவரை விசாரித்தாலே போதும் அவர் மீது பொய்ப்புகார் கொடுக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது. காவல்துறையினர் புகாரின் உண்மை தன்மை அறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு பொய் புகார் அளித்தால் அவர்கள் மீது சட்டப்படி காவல் துறை நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். 
தமிழக காவல் துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதில் செய்தியாளர்கள் மீது புகார் வந்தால் அந்த புகாரை விசாரிக்காமல் அவசர கோலத்தில் வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று குறிப்பிட்டால் அப்பாவி செய்தியாளர்கள் சமூக விரோதிகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். 
செய்தி வெளியிட்டால் அது உண்மைக்கு புறம்பாகவோ, தனி நபர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பொய் என்றாலோ நீதிமன்றத்தில் புகார் கொடுத்து நடவடிக்கைக்கு உத்தரவிடலாம். பின்னர் விசாரணையில் உண்மை தானாக வெளிவரும். அதைவிடுத்து நேரடியாக காவல் நிலையத்தை நாடி பொய் புகார் கொடுப்பது ஆரோக்கியமானதாக இருக்காது. செய்தியாளர்கள் மீது பணம் கேட்டு மிரட்டியதாக மட்டுமே புகார்கள் தரப்படுகின்றன. இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள பல மாவட்டங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு யாரும் குரல் கொடுக்க முன்வருவதில்லை. இதனால் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் முதலில் ஒன்றிணைய வேண்டும். பத்திரிகையாளர்களின் ஒட்டுமொத்த சக்தி என்னவென்று சமூக விரோதிகளுக்கு தெரிவிக்க வேண்டும். குண்டர்களை வைத்து மிரட்டுவது நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும். செய்தியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். 
செய்தியாளர்களை மிரட்டுபவர்கள், பொய் புகார் கொடுப்பவர்கள் (சமூகவிரோதிகள், தொழிலதிபர்கள்) மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வருங்காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது பொய் புகார் கொடுப்பவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றால் தமிழகம் முழுவதும் உள்ள செய்தியாளர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த தயங்கமாட்டோம்.
தமிழகம் ஸ்தம்பிக்கும் நிலையை பத்திரிகையாளர்கள் ஏற்படுத்த ஆயத்தமாகி வருகின்றனர். பொறுத்து பொறுத்து பார்த்தும் எந்தவித நடவடிக்கையும் பத்திரிகையாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக தெரியவில்லை. குண்டர்களுக்கும், ரௌடிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் மட்டுமே காவல் துறை விழுந்து விழுந்து கவனிக்கிறதே தவிர செய்தியாளர்களை கண்டு கொள்வதே இல்லை. 
செய்தியாளர்களை காவல் துறையினர் கிள்ளுக்கீரைகள் போல் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் பல நேரங்களில் காவல் துறையினருக்கு பத்திரிகை துறையினர்தான் உறுதுணையாக இருக்கின்றனர் என்பதை உணரவேண்டும். 
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண பத்திரிகை என்பதை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய கடமை செய்தியாளர்கள் சங்கத்துக்கு இருந்து கொண்டே உள்ளது. பத்திரிகையாளர்கள் மீது புகார் கொடுப்பவர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் தெரிந்து விடும் அந்த நபர் எப்படிப்பட்ட சமூகவிரோதியாக இருப்பார் என்பது நன்கு புலப்படும். சில காவல் துறை அதிகாரிகள் "ப" வைட்டமின் வாங்கிக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு செய்தியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலை முதலில் மாற வேண்டும். 
சட்டம் தன் கடமையை செய்வதற்கு யாரும் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால் இன்றைய நிலையோ மிகவும் மோசமாக மாறி வருகிறது.   சமூகவிரோதிகளுக்கு  துணைபோகும் காவல் துறையினர் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. 
பத்திரிகையாளர்கள் தினத்தன்று வாழ்த்துக்கள் கூறுவதோடு மட்டுமின்றி அவர்கள் பாதுகாப்புக்கு உறுதி செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
உண்மையான புகார்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க தடை ஏதும் இல்லை. போலிகளை ஊக்குவிக்கும் நிலை       மாற வேண்டும் என நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.       

Label