OUR CLIENTS
5 மாநில தேர்தல் முடிவுகள் தலை சாய்ந்தது தாமரை!
5 மாநில தேர்தல் முடிவுகள் தலை சாய்ந்தது தாமரை! Posted on 12-Dec-2018 5 மாநில தேர்தல் முடிவுகள் தலை சாய்ந்தது தாமரை!

புதுடெல்லி, டிச.12-

தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டசபைகளுக்கும், நவம்பர் மற்றும் டிசம்பரில் தேர்தல்கள் நடைபெற்றன.  தேர்தல் நடைபெற்ற இந்து மாநிலங்களிலுமே  பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இது மத்திய மோடி அரசின் மீதான மக்களின் அதிருப்தியாக பார்க்கப்படுகிறது. 
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் அது 4 ஆண்டுகால மத்திய மோடி அரசு மீதான மக்களின் நம்பிக்கையாகவும், தோற்றால், மோடி மீதான அதிருப்தியாகவும் பார்க்கப்படும் என்று பார்க்கப்பட்டது. எனவே, 5 மாநில தேர்தல்களில் இம்மூன்று மாநிலங்கள் மீதும் அரசியல் விமர்சகர்கள் கண்கள் இருந்தன.
மோடியை முன்னிறுத்திதான் இம்மாநிலங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. உள் மாநில பிரச்சினைகளும் வாக்களிப்பில் முக்கிய பங்கு வகித்தது என்றபோதிலும், மோடி சர்க்கார் மீதான நம்பிக்கை அல்லது நம்பிக்கை யின்மையாகத்தான் பெருவாரியான மக்களால் இந்த தேர்தல் பார்க்கப்படும் என்றார்கள். இப்படியான பரபரப்புக்கு நடுவேதான் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 
நேற்று காலை 9 மணி நிலவரப்படி ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்த போது, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல, இந்த ட்ரெண்ட் என்பது மாறியது. சட்டீஸ்கரில் எளிதாக காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.
இந்த முன்னிலை பாஜக முன்னிலை வகித்த தொகுதிகளை விட மிக அதிகமாக இருந்தது. மத்திய பிரதேசத்தில் மட்டும் காலை 10 மணி வரை கடும் போட்டி நிலவியது. முதலில் பாஜக இங்கு முன்னிலை வகித்த போதிலும், காலை 10 மணிக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பாஜகவை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்க ஆரம்பித்தது. தெலுங்கானாவை பொறுத்தளவில் காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் மிசோராமிலும் அதேபோன்று 2வது இடத்தையும் பிடித்தது. ஆனால் இந்த இரு மாநிலங்களிலும் பாஜக தலா ஒரு தொகுதியில்தான் முன்னிலை வகித்தது. எனவே, அங்கும் பாஜகவுக்கு படுதோல்வி. 
தெலுங்கானாவில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றியை தக்க வைத்துக் கொண்டது, அதே போல், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி வெற்றி கனியை பறித்துள்ளது. மற்ற மூன்று மாநிலங்களில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவிற்கு காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.  ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் பா.ஜனதா ஆட்சியை இழந்துள்ளது. காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ளது. சத்தீஷ்கார் பா.ஜனதா முதல்வர் ராமன் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதேபோன்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் தன்னுடைய ராஜினாமாவை வழங்கியுள்ளார்.  
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் என்பது அரையிறுதி போன்றே பார்க்கப்பட்டது. இந்த அரையிறுதியில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.
இதுகுறித்து ராகுல் காந்தி பேசுகையில், மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்.  இது விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கான வெற்றியாகும்.  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கரில் நாங்கள் பா.ஜனதாவை தோற்கடித்துள்ளோம்.  இது மாற்றத்திற்கான நேரமாகும். வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையை இம்மாநிலங்களுக்கு வழங்கப்போகிறோம். பிரதமர் மோடி தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என்பதை தேர்தல் முடிவு உறுதிசெய்துள்ளது. எதிர்க்கட்சிகள் வலுவாக இணையும், 2019 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.           
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் தலை வணங்கி ஏற்கிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள். மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், சந்திரசேகர ராவ், மிசோ தேசிய முன்னணி கட்சிக்கு வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார்.

Label