OUR CLIENTS
ஏரிகள் பல நாசமானது கூகுள் மேப் மூலம் அம்பலம்!
ஏரிகள் பல நாசமானது கூகுள் மேப் மூலம் அம்பலம்! Posted on 12-Dec-2018 ஏரிகள் பல நாசமானது கூகுள் மேப் மூலம் அம்பலம்!

காஞ்சிபுரம், டிச.12-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15 ஆண்டுகளில் பல ஏரிகள் மானாவாரியாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
கூகுள் இணையதள நிறுவனத்தின் செயற்கைக்கோள் வரைபட உதவியுடன் இது தெள்ளத் தெளிவாகிறது. ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கட்டடங்கள் பெருகி நீர்த்தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இது அடுத்து வரும் ஆண்டுகளில் பெரிய அளவில் தண்ணீர் மற்றும் சட்டம் & ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தக் கூடும்.தமிழகத்தில் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் உள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் 1,000த்திற்கும் மேற்பட்ட ஏரிகளும் உள்ளன.பெயரளவுக்கு இந்த ஏரிகளை இந்த துறைகள் பராமரித்தாலும் ஆக்கிரமிப்பை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர் என்பது தான் உண்மை. ஆக்கிரமிப்புகளால் ஏரிகளின் அடையாளம் எல்லைகள் நீர்த் தேக்கப் பகுதிகள் மாறி விட்டன.ஏரிக்குள் கட்டப்படும் வீடுகள் மற்றும் கட்டடங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதால் ஏரியின் பரப்பு குறைந்து நீர்த்தேக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
கடந்த 2015ல் பெய்த பெரு மழையால் சென்னை, காஞ்சிபுரம் நகரங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு முக்கிய காரணம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டியது தான் என்பது பலரும் அறிந்ததே.பெரிய பாதிப்புகளை மக்கள் சந்தித்த பிறகும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பொதுப்பணித் துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக அவ்வப்போது அறிக்கை அளிப்பது கண் துடைப்பு வேலையாகவே இருக்கிறது.அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் 15 ஆண்டுகளில் பெரும்பாலான ஏரிகள் அழிவின் நிலையில் உள்ளன என்பது கூகுள் இணையதளத்தின் செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் தெரிய வருகின்றன. ஊரப்பாக்கம் ஏரிக்குள் எண்ணற்ற ஆக்கிரமிப்புகள் முளைத்து அதன் தன்மையே மாறிப்போயுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய சில ஏரிகளின் கடந்த கால புகைப்படங்களை கூகுள் நிறுவன செயற்கை கோள் படங்கள் மூலம் பார்க்கும் போது ஏரியின் முழு கொள்ளளவு என்ன என்பது தெரிகிறது.அத்துடன் தற்போதைய வரைபடத்தை பார்க்கும் போது ஏரிக்குள் எந்த அளவு கட்டடங்கள் கட்ட முடியுமோ அந்த அளவிற்கு கட்டி ஆக்கிரமித்துள்ளதையும் அறிய முடிகிறது.உதாரணமாக ஆதனூர், செம்பரம்பாக்கம், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் வடிவமே பெருமளவில் மாறி போயுள்ளன. இந்த நான்கு ஏரிகள் மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எண்ணற்ற ஏரிகள் நாசமாகி வருவதாக விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஏரிகள் ஆக்கிரமிப்பு காரணமாக, ஏரியும் தூர்க்கப்படுகிறது. தண்ணீரும் தேக்க முடியாமல் போகிறது. குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏரியில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள், கரையை உடைக்கவும் செய்கின்றனர். அரசியல் குறுக்கீடு காரணமாக பொதுப்பணித் துறையினரும் மெத்தனமாக இருக்கின்றனர். ஏரி ஆக்கிரமிப்புகளால் விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் பாதிப்படைகின்றனர். மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித் துறை மட்டுமல்லாமல், அனைத்து துறை அதிகாரிகளும், அக்கறையுடன் செயல்பட்டால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும்.

Label