OUR CLIENTS
சென்னை துறைமுக பணி நியமனங்களில் முறைகேடு நான்கு உயர் அதிகாரிகள் நியமன ஆணை ரத்து!
சென்னை துறைமுக பணி நியமனங்களில் முறைகேடு நான்கு உயர் அதிகாரிகள் நியமன ஆணை ரத்து! Posted on 12-Dec-2018 சென்னை துறைமுக பணி நியமனங்களில் முறைகேடு நான்கு உயர் அதிகாரிகள் நியமன ஆணை ரத்து!

சென்னை, டிச.12-

சென்னை துறைமுகத்தில் பணியாற்றி வரும் உதவி போக்குவரத்து மேலாளர் நான்கு பேரின் நியமனம் ரத்து செய்யப்படுவதாக, துறைமுக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சென்னைத் துறைமுகத்தில், முதல்நிலை அலுவலர் பிரிவான உதவி போக்குவரத்து மேலாளர் பதவிக்கு 2008-ஆம் ஆண்டு தேர்வு நடைபெற்றது. பணிமூப்பு அடிப்படையில் அல்லாமல் நேரடி நியமன அடிப்படையில் இதற்கான தேர்வு நடைபெற்றது. இதற்கென சிறப்புத் தேர்வு குழுவும் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வி.சாந்தி, பி.அன்புச்செழியன், பி.முரளிதரன், எஸ்.குணசேகரன் ஆகிய நான்கு பேர் உதவி போக்குவரத்து மேலாளர்களாக நியமனம் செய்யப் பட்டனர். இவர்கள் நான்கு பேரும், துறைமுகத்தில் நான்காம் நிலை ஊழியர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பணிமூப்பு அடிப்படையில் இப்பதவியை எதிர் பார்த்துக் காத்திருந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர், நேரடியாக உதவி போக்குவரத்து மேலாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டது செல்லாது என மத்திய கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த நியமனம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. மேலும், தேர்வு விதிமுறைகள் மீறப்பட்டு நியமனம் செய்யப் பட்டுள்ளதால் உதவி போக்குவரத்து மேலாளர்களாகப் பணியாற்றி வரும் நான்கு பேருக்கும் அவர்களை ஏன் பணிநீக்கம் செய்யக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்கும்படி துறைமுக நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது.
துறைமுக நிர்வாகத்தின் நோட்டீசை எதிர்த்து, நான்கு பேரில் ஒருவரான பி.முரளிதரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணையின்போது, நியமனங்களில் விதிமீறல் மற்றும் முறைகேடுகள் நடை பெற்றுள்ளதால் துறை ரீதியிலான நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துறைமுக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற உயர்நீதிமன்றம் ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், சென்னைத் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப் பட்டுள்ளதாவது: சென்னை துறைமுகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு உதவி போக்குவரத்து மேலாளர் பதவிக்கு தேர்வு நடைபெற்றது. இதில் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் பணி நியமனம் குறித்த விதிமுறைகள் மீறப் பட்டுள்ளது தெரிய வருகிறது. இப்பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக அளிக்கப் பட்டுள்ளன. போக்கு வரத்து துறையில் ஏற்கெனவே பணியாற்றியதற்காக கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது என்ற கருத்து, துறைமுக விதிகளுக்கு முரணானது மட்டுமல்ல, இயற்கை நீதிக்கும் எதிரானது ஆகும். 
மேலும், தேர்வில் பங்கு பெற்றவர்களின் விடைத் தாள்களை மீண்டும் சரிபார்த்தபோது தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு மதிப்பெண்கள் அசாதாரண முறையில் அளிக்கப்பட்டிருப்பதும், நேர்மையற்ற முறையில் விடைத் தாள்கள் திருத்தப்பட்டிருப்பதும் நிரூபணமாகியுள்ளது.
எனவே வி.சாந்தி, பி.அன்புச்செழியன், பி.முரளிதரன், எஸ்.குணசேகரன் ஆகிய நான்கு பேரும் உதவி போக்குவரத்து மேலாளர் களாக நியமிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த நான்கு பேரும் 2008-ஆம் ஆண்டு துறைமுகத்தில் எந்தப் பொறுப்பில் இருந்தார்களோ, அதே இடத்தில் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும். இந்த உத்தரவின் மீது மேல்முறையீடு செய்ய விரும்பினால் துறைமுக விதிகளின் பணியாளர்களுக்கு அளிக்கப் பட்டுள்ள உரிமைகளின்படி செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label