OUR CLIENTS
பாரதிக்கு ஜதி பல்லக்கு தூக்கிய ஓபிஎஸ்
பாரதிக்கு ஜதி பல்லக்கு தூக்கிய ஓபிஎஸ் Posted on 12-Dec-2018 பாரதிக்கு ஜதி பல்லக்கு தூக்கிய ஓபிஎஸ்

சென்னை, டிச.12-

சென்னை - திருவல்லிக் கேணியில் அமைந்துள்ள பாரதியார் நினைவில்லத் திலிருந்து பார்த்தசாரதி கோவிலைச் சுற்றிய தேரோடு வீதியில், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக  அமைச்சர் பாண்டியராஜன், பாரதீய ஜனதா தலைவர்கள் இல. கணேசன், எச். ராஜா, நடராஜன் எம்.எல்.ஏ ஆகியோர் பாரதியாரின் 136வது பிறந்தாளையொட்டி (11 டிசம்பர் 1882) பாரதியின் ஜதி பல்லக்கை தூக்கி வந்தனர்.
முன்னதாக தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், பாரதிக்கு ஜதி பல்லக்கு ஊர்வலம் நடத்துவது ஏன் என்று சிறப்புரை ஆற்றினார்.
மகாகவி பாரதி  தன்னை உணர்ந்தவர், தான் பாடிய பாடலின் தரம் உணர்ந்தவர், தனது பாடல்களின் தாக்கத்தின் திறம் உணர்ந்தவர்.
அதனால்தான், எட்டயபுரத்து அரசருக்கு எழுதிய சீட்டுக்கவியில், வியத்தகு என் கவிதையினை, நின் சன்னதியில் நான் பாட, நீ கேட்டு, நன்கு போற்றி, ஜயப் பறைகள் சாற்றுவித்து, ஜதி பல்லக்கு, பரிவாரங்கள் பரிசளித்து, பல்லாண்டு வாழ்க என்று எழுதி அனுப்பினார்.
பாரதியின் அந்த விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ஆண்டு தோறும் அவரது பிறந்த நாளில், அவரது திருஉருவத்தை ஜதி பல்லக்கில் அமர்த்தி, ஊர்வலமாகக் கொண்டு சென்று, பாரதியாரின் நினைவைப் போற்றி பாரதி திருவிழாவை நாமெல்லாம் சிறப்புடன் நடத்தி வருகிறோம். இவ்விழாவை நடத்தி வரும் பாரதி பண்பாட்டு மையத்தை எவ்வளவு போற்றினாலும் தகும்.
பாரதி திருவிழாவை ஒட்டி கலைவாணர் அரங்கில் டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் தேதிகளிலும், பாரதி இல்லத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கு இசைஅரங்கு, பட்டிமன்றம், நாடகம், நூல்வெளியீடு, மற்றும் நேற்று காலை நடைபெற்ற நடை உலா என பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மகாகவி பாரதியாரின் புகழுக்கு புகழ் சேர்த்த அனைத்து பெருமக்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துக் களையும், நன்றி களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய மக்களின் பண் பாடுகளையும், உணர்ச்சி ஓட்டங்களையும் உணர்ந்தவர் மகாகவி பாரதி.  தமிழக மக்களின் நிறைகளையும், அவர்தம் அறங்களையும் வீர மறங்களையும் அறிந்தவர் மகாகவி பாரதி. தமிழர்களின் முன்னேற்றத்திற்கு தடையென நிற்பவை எவை எனக் காட்டி, அந்த தடைக்கற்களை தூக்கியெறிந்து அவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்ல வழிகாட்டியவர் மகாகவி பாரதி.
மகாகவி பாரதியார் காட்டிய வழியில், தெய்வ பக்தி ஏற்று, தேச பக்தி காட்டி, தமிழ்ச் சமுதாயம் முன்னேற அயராது உழைத்திட மகாகவி பாரதி பிறந்த இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் பெண்ணுரிமை காத்து எண்ணில்லாத் திட்டங்கள் தந்து தமிழ் உலகுக்கு  பெரும் தொண்டாற்றிய மாண்புமிகு அம்மா அவர்களது அரசு உங்களது சீரிய முயற்சிகளுக்கு நாங்கள் என்றும் உறுதுணையாக இருக்கும்  என்று கூறி அமைகிறேன். என, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது உரையில் தெரிவித்தார்.

Label