OUR CLIENTS
துள்ளிக்கிட்டு பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மதுரையில் களை கட்டும் காளை விழா கோலாகலம்!
துள்ளிக்கிட்டு பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மதுரையில் களை கட்டும் காளை விழா கோலாகலம்! Posted on 13-Dec-2018 துள்ளிக்கிட்டு பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளை மதுரையில் களை கட்டும் காளை விழா கோலாகலம்!

அலங்காநல்லூர், டிச.13-
மதுரை அலங்கா நல்லூரில் உலகப்புகழ் ஜல்லிக்கட்டு விழா 2019 ஜன., 16 ல் களைகட்டவுள்ளது. இதற்கான கொடியேற்றம் நேற்றுமுன்தினம் நடந்தது.
மதுரையின் பெருமை களில் ஜல்லிக்கட்டும் ஒன்று. மழை பெய்து, விவசாயம் செழித்து நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெருக வேண்டி ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜன.,14, பாலமேட்டில் ஜன.,15, அலங்காநல்லூரில் ஜன.,16 ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. ஜல்லிக்கட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து காளைகள் பங்கேற்பது வழக்கம். இதற்காக காளைகளை தயார் படுத்தும் விதமே தனி சிறப்பு தான். தென்னந்தோப்புகளில் காளைகளை பராமரிக் கின்றனர்.
இதற்காக காளை ஒன்றுக்கு பயிற்சியாளர் நால்வர் 'ஷிப்ட்' முறையில் பணியாற்றுகின்றனர். காளைக்கு பிடித்த உணவுகளை தேவையான அளவு வழங்குகின்றனர். களத்தில் நின்று விளையாடுவதற்காக காளைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் 30 நிமிடம் நீச்சல் பயிற்சி, 30 நிமிடம் நடை பயிற்சி, 30 நிமிடம் மண் குத்தும் பயிற்சி கட்டாயம் அளிக்கப்படுகிறது. 
பகல் முழுவதும் நிழலில் ஓய்வு எடுக்க வைக்கின்றனர். காளை துருதுருவென இருக்கிறதா அல்லது சோர்வாக காணப்படுகிறதா என்பதை கண்காணித்து அதற்கு ஏற்ப தயார்படுத்துகின்றனர். 
இதுகுறித்து காளை வளர்ப்போர் கூறியதாவது:
செல்வம், ஒத்தவீடு: முப்பாட்டன் காலத்தில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கிறோம். எங்களின் குல தெய்வ வழிபாட்டில் காளை முக்கிய பங்கு வகிக்கிறது. இரண்டரை வயதுள்ள காளையை வாங்கி 'வீரணன்' என பெயரிட்டு வளர்க்கிறேன். அதற்கு தற்போது வயது 12. கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்றுள்ளது. அன்னியர் யாரை கண்டாலும் காளை 'செருமி' சகுனம் கொடுக்கும்.
கோவிந்தராஜன், அலங்காநல்லூர்: அலங்கா நல்லூர் காளியம்மன், முத்தாலம்மன், முனியாண்டி, ஐயனார் கோயில் விழாக்களை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடக்கிறது. காளைகளை வளர்ப்பதும், வழிபடுவதும் குலதெய்வ வழிபாட்டுடன் இரண்டற கலந்தது. கருமையான அழகான கண்கள், உயரமான திமில், நேரான கால்கள், நாலாதிசைகளையும் பார்க்கும் துருதுரு பார்வை, நிமிட நேரம் கூட ஓய்வின்றி சுறுசுறுப்பாக செயல்படும் போக்கு, ஆட்கள் நெருங்கினால் சீறும் பாங்கு போன்ற குணங்கள் நிரம்பிய நாட்டுக்காளை கன்றுகளை தேர்வு செய்து ஜல்லிக்கட்டு காளையாக வளர்ப்பது ஒரு கலை.
அஜித்குமார், அ.புதுப்பட்டி: இரண்டு கன்றுகள், பெரிய காளை, மூன்றரை வயது சிறிய காளைகளை வளர்க்கிறோம். இரண்டு வயது கன்றுகளை வாங்கி பார்த்து, பார்த்து, பக்குவமாக வளர்ப்பதை தெய்வத்துக்கு செய்யும் பணிவிடையாக கருதுகிறோம். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு விழாக்கள் எங்கு நடந்தாலும் காளைகளை இறக்கி விடுவோம். காளைகள் குவிக்கும் பரிசுகளை எடுத்து வர தனியாக வேன் பிடித்து செல்வது வழக்கம். முறையான நீச்சல் பயிற்சியில் ஈடுபடுத்தப்படும் காளைகள் களத்தில் நின்று விளையாடுவது உறுதி.
கொடியேற்றம் தொடக்கம்
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழாவிற்கான கொடியேற்றம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. காளியம்மன், முத்தாலம்மன், முனியாண்டி, ஐய்யனார் கோயில்களின் பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் துவங்கினர். பாலமேட்டில் வாடிவாசலின் வலதுபுறம் நிரந்தர 'பார்வையாளர் இருக்கைகள்' பாலமேடு மகாலிங்க சுவாமி பொதுமடத்துக் கமிட்டி சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு வீரர்கள், காளை வளர்ப்போரை கவுரவிக்கும் வகையில் கடந்த ஆண்டை போலவே ஏராளமான புதிய பரிசுகளை வழங்க விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Label