OUR CLIENTS
நெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க கருத்துக் கேட்பு மக்கள் ஆவேசம்!
நெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க கருத்துக் கேட்பு மக்கள் ஆவேசம்! Posted on 13-Dec-2018 நெய்வேலியில் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க கருத்துக் கேட்பு மக்கள் ஆவேசம்!

கடலூர், டிச.13-

என்எல்சி இந்தியா  நிறுவனத்துக்கு மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பது தொடர்பாக பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள என்எல்சி மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட  ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை வகித்தார்.  சார் ஆட்சியர்கள் சிதம்பரம் விசு மகாஜன், விருத்தாசலம் பிரசாத் மற்றும் கடலூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரி ராஜா, என்எல்சி நிறுவன சுற்றுச்சூழல் துறை ஆலோசகர்  டாக்டர் வேலன் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கூட்டத்துக்கு வந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள்,  திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்தும், தங்கள் நிலங்களை என்எல்சி நிறுவனத்துக்கு தரமாட்டோம் என முழக்கமிட்டும் ஊர்வலமாகச் சென்றனர்.
கூட்டம் நடைபெறும் வாயில் முன்பு அவர்களை நிறுத்திய போலீஸார், பின்பு கூட்ட அரங்கில் அமரச் செய்தனர். முதலில் என்எல்சி  சுற்றுச்சூழல் துறை ஆலோசகர் டாக்டர் வேலன் திட்டம் குறித்து பேசினார். அதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்பு பேசிய விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அனைவரும், என்எல்சி நிறுவனத்தால் நெய்வேலியின் சுற்றுச்சூழல் மாசுப்பட்டுள்ளது. இதுவரை என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வீடு கொடுத்தவர்களுக்கு நிர்வாகம் வேலை வாய்ப்பு வழங்கவில்லை. வழங்கப்பட்ட மாற்று மனை மற்றும் நிலத்துக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. என்எல்சி நிறுவனத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
இந்தக் கூட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம், முன்பே எல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டது என்று தெரிவித்தனர். ஒரு ஏக்கர் நிலத்தில் 127 கோடி ரூபாய்க்கு கனிம வளம் இருக்கிறது, ஆனால் என்எல்சி நிறுவனம் எங்களுக்கு குறைவான தொகையே தருகிறது. என்எல்சி நிறுவனத்துக்கு ஒரு சென்ட் நிலத்தைகூட தர மாட்டோம்.  மீறிஎங்கள் நிலங்களை எடுக்க முற்பட்டால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் தங்கள் கருத்துகளை கடுமையாக பதிவு செய்தனர். கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினரும், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Label