OUR CLIENTS
தூய்மை இந்தியா திட்ட மாணவர் தூதர் நியமனம்!
தூய்மை இந்தியா திட்ட மாணவர் தூதர் நியமனம்! Posted on 14-Dec-2018 தூய்மை இந்தியா திட்ட மாணவர் தூதர் நியமனம்!

வாணியம்பாடி, டிச. 14-

வீட்டில் கழிவறை கட்டித்தராத தந்தையைக் கைது செய்யுங்கள் என்று கூறி இரண்டாம் வகுப்பு மாணவி போலீஸில் புகார் அளித்த சம்பவம் எதிரொலியாக மாணவியின் வீட்டுக்கு கழிவறை கட்டியும், நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்கள் தூதுவராக நியமனம் செய்தும் கடிதத்தை வழங்கினர். 
வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் இஹஸ்ஸானுல்லாஹ். இவரது மகள் ஹனீபா ஜாரா (7). தனியார் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்குச் சென்ற மாணவி ஹனீபா ஜாரா, சப்- இன்ஸ்பெக்டர் வளர்மதியைச் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். எனது வீட்டில் கழிவறை இல்லை. திறந்த வெளியைப் பயன்படுத்தி வருகிறோம். இது எனக்கு அவமானமாக இருக்கிறது. கழிவறை கட்டித்தர தந்தையிடம் கேட்டேன். 
நான் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்தால் கழிவறை கட்டித்தருவதாக அப்பா கூறினார். எல்.கே.ஜி. முதல் தற்போது இரண்டாம் வகுப்பு வரை நன்றாகப் படித்து முதல் ரேங்க் எடுத்துக்கொண்டே இருக்கிறேன். என் அப்பா கழிவறை கட்டித்தராமல் ஏமாற்றிக் கொண்டேயிருக்கிறார். எனவே, அப்பாவைக் கைது செய்யுங்கள் அல்லது கழிவறை எப்போது கட்டித்தருவார் என எழுதிக்கொடுக்கச் சொல்லுங்கள் என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார் அந்த மாணவி.
புகாரை பெற்றுக்கொண்ட சப்- இன்ஸ்பெக்டர் மாணவியைப் பாராட்டியதோடு அவரது தந்தையை போலீஸ் நிலையம் வரவழைத்து அறிவுறுத்தினார். இதையறிந்த நகராட்சி துப்புரவு ஆய்வாளர், அரசு திட்டத்தில் மாணவியின் வீட்டுக்கு கழிவறை கட்டித்தருவதாக உறுதியளித்தார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவின் பேரில் சுவச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மாணவி வீட்டில் கழிவறை கட்டவும், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாணவியை நகராட்சி தூதுவராக நியமனம் செய்ய நகராட்சி ஆணையாளர் பார்தசாரதிக்கு உத்தரவிட்டார். 
இதன் பேரில் நகராட்சி சுகாதார அலுவலர் பாஸ்கர் தலைமையில் அதிகாரிகள் மாணவி படிக்கும் பள்ளிக்குச் சென்று மாணவர்கள் தூதுவராக நியமனம் செய்த கடிதத்தை மாணவி ஹனீபா ஜாராயிடம் வழங்கினர். மேலும் மாணவி வசிக்கும் வீட்டின் அருகே சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவறை இல்லாத நிலை உள்ளது. மாணவியின் போராட்டத்தால் விரைவில் அப்பகுதில் அரசு திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டித்தரப்படுமா? என்று இந்தப்பகுதி வாழ் பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

Label