OUR CLIENTS
மாநகராட்சி டெண்டரில் ஊழல் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடருவோம்! மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
மாநகராட்சி டெண்டரில் ஊழல் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடருவோம்! மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை Posted on 14-Dec-2018 மாநகராட்சி டெண்டரில் ஊழல் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடருவோம்! மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, டிச.14-

மாநகராட்சி டெண்டரில் நடைபெறும் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கா விட்டால் வழக்கு தொடருவோம் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- உயர்நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண் டிருக்கின்ற இந்த நேரத்தில் கூட, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் ஊழல், சென்னை மாநகராட்சியில் எவ்வித அச்சம் நாணமுமின்றி தலை விரித்தாடுவது அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னை மாநகராட்சி டெண்டர்களில் சிண்டிக்கேட் அமைத்து ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் டெண்டர் போட்டுக் கொண்டுள்ளார்கள்; அந்த டெண்டர்கள் சென்னை மாநகராட்சி விலைப்பட்டியலை விட 30 முதல் 50 சதவீதம் வரை அதிகமாக உள்ளது; பிடுமென் போடுவதற்கு விலைப்பட்டியலை விட 100 சதவீத விலை அதிகமாக போட்டிருக்கிறார்கள்.
சிமெண்ட் சாலைகள் போட ரெடிமிக்ஸ் எம்30 சிமெண்ட் கான்டிராக்ட் விலை 50 சதவீதம் அதிகம் போடப்பட்டுள்ளது; 30 நாட்கள் டெண்டர் நோட்டீஸ் காலம் ஊழலுக்கு வழி விட 15 நாட்களாகக் குறைக்கப் பட்டுள்ளது; சில டெண்டர்களில் கணவனும் மனைவியுமே போட்டியாளர்களாக டெண்டர் போட்டு தங்களுக்குள் பணியை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்; பல ஒப்பந்ததாரர்கள் ஒரே கணிணியிலிருந்து ஆன்லைன் டெண்டர் போட்டிருக்கிறார்கள் என்று எங்கும் காணாத "இமாலய முறைகேடுகள்" சென்னை மாநகராட்சி டெண்டரில் வெளிவந்து, அ.தி.மு.க. ஆட்சியில் மாநகராட்சி நிர்வாகம் துர்நாற்றத்தில் சிக்கித் தவிக்கிறது.
ஏற்கனவே தன் உறவினர்களுக்கு ஒப்பந்தம் வழங்கிய புகார் அமைச்சர் மீது அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் உறவினர்களுக்கே டெண்டர் வழங்கி ஊழல் செய்து வரும் அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதாரபூர்வமான ஊழல் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய லஞ்ச ஊழல் தடுப்புத்துறை அ.தி.மு.க. அமைச்சர்கள், ஆளுங்கட்சியினர் ஊழல் புகார் என்றால் அஞ்சி நடுங்கி பதுங்கிக் கொள்வது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்ல அதன் ஊழல் ஒழிப்பு முழக்கத்தையே சாக் கடைக்குள் தள்ளியிருக்கிறது.
"சென்னை மாநகராட்சியில் உள்ள விஜிலென்ஸ் அமைப்பை கூண்டோடு கலைக்க வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்து தடையுத்தரவு பெற்றது இப்படி சென்னை மாநகராட்சியில் கொள்ளை யடிக்கவா? உள்ளாட்சித் துறை அமைச்சரின் ஊழல்களை "பட்டுக் கம்பளம்" போர்த்தி மறைக்கவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆகவே 740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி பணிக்கான டெண்டர்களில் நடை பெற்றுள்ள ஊழல்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை எவ்வித தாமதமும் இன்றி நடவடிக்கை எடுத்து, ஊழலுக்கு காரணமான மாநகராட்சி அதிகாரிகள், துறை அமைச்சர் வேலுமணி இந்த ஊழலை இதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாநகராட்சி "விஜிலென்ஸ் அதிகாரிகள்" அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மக்கள் பணியில் குறிப்பாக சென்னைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளில் நடைபெறும் ஊழல்களை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அதையும் மீறி நடவடிக்கை எடுக்கத் தவறினால் தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Label