OUR CLIENTS
ரிசர்வ் வங்கி விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவது பொருளாதாரத்தை நாசமாக்கும் முயற்சி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு
ரிசர்வ் வங்கி விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவது பொருளாதாரத்தை நாசமாக்கும் முயற்சி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு Posted on 14-Dec-2018 ரிசர்வ் வங்கி விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவது பொருளாதாரத்தை நாசமாக்கும் முயற்சி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

சென்னை, டிச.14- 

ரிசர்வ் வங்கி செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுவது நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கும் முயற்சி என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொருளாதாரப் பிரிவான சுதேசி ஜாக்ரன் மண்ஞ்ச் தலைவர் அஸ்வனி மகாஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தரும் வகையில் அரசாங்கத்துடன் இணைந்து செல்ல வேண்டும். முடியவில்லை எனில் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போக வேண்டும் என்று உத்தரவிடும் வகையில் மிரட்டல் விடுத்தார்.
நாட்டின் தன்னிச்சையான அமைப்புக்கள் மீது ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கூட்டம் ஆதிக்கம் செலுத்துகிறது. பாஜக அரசு அதனை நிறைவேற்றும் வகையில் எதேச்சாதிகாரப் போக்கில் செயல்படுகிறது என்பதற்கு ரிசர்வ் வங்கி மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.
வாராக் கடன் பிரச்னையைத் தீர்ப்பது, கடன் வழங்குவதில் 11 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரிக் கையிருப்பை அரசுக்கு மாற்றுவது, பணப்பட்டு வாடாவைக் கண்காணிக்க தனி ஒரு ஒழுங்குமுறை அமைப்பை நிறுவி ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தைக் குறைப்பது' போன்றவற்றில் பாஜக அரசின் உத்தரவுகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பான மோதல்தான் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை விட்டு வெளியேறுவதற்கு அடிப்படைக் காரணங்கள் ஆகும்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தால் அதன் துணை ஆளுநர்தான் அப்பொறுப்பை ஏற்க வேண்டும். பாஜக அரசு எந்தவிதமான மரபுகளையும், விதிகளையும் பின்பற்றுவது இல்லை என்பதில் விடாப்பிடியாக இருக்கிறது. எனவேதான் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுயேச்சையாக இயங்க வேண்டிய ரிசர்வ் வங்கியை ஆர்எஸ்எஸ் காவிப்படை கைப்பற்றி உள்ள நிலையில், சக்திகாந்த தாஸ் ஆளுநராக நியமிக்கப் பட்டிருக்கிறார். நாட்டின் கருவூலத்தைச் சூறையாடும் வகையில் மத்திய பாஜக அரசு சதித் திட்டங்களைத் தீட்டுவதும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மாற்றுவதும், பொதுத்துறை வங்கிகளை சீர்குலைப்பதும் மிகப்பெரிய பொருளாதார அழிவை நோக்கி நாடு தள்ளப்படும் ஆபத்தை உருவாக்கி வருகிறது.
இந்திய நாட்டின் 120 கோடி மக்களின் காக்கும் கருவூலமான ரிசர்வ் வங்கியை சீர்குலைத்து, நாட்டின் பொருளாதாரத்தை நிரந்தரமாக நாசமாக்கும் அக்கிரமமான முயற்சியில் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டுள்ளது. 2019 மே மாதம் பாஜக தலைமையிலான அரசு அமைய ஒரு சதவீதம்கூட வாய்ப்பு இல்லாத நிலையில், போகிற போக்கில் இந்த அழிவு வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.
நரேந்திர மோடியின் கைப்பாவையான சக்திகாந்த தாஸ் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் நிர்வாக ஆலோசனைக் குழுவில் கடந்த ஓராண்டில் நியமிக்கப்பட்டவர்கள் நீக்கப்பட வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் வழக்குத் தொடுக்க முன்வரவேண்டும். நாட்டின் தலைக்குமேல் தொங்கும் கத்தியைக் கயிற்றுடன் அறுத்து குப்பையில் வீச வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Label