OUR CLIENTS
ஒரு வாரத்துக்கு முன்பே ஸ்டாலினை சந்தித்தேன்
ஒரு வாரத்துக்கு முன்பே ஸ்டாலினை சந்தித்தேன் Posted on 14-Dec-2018 ஒரு வாரத்துக்கு முன்பே ஸ்டாலினை சந்தித்தேன்

கரூர், டிச.14-   

ஒருவாரத்துக்கு முன்பே ஸ்டாலினை சந்தித்தேன். இந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
2006, 2011 சட்டமன்ற தேர்தலில்களில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி, 2011-ல் ஜெயலலிதா ஆட்சி அமைத்த போது அவருக்கு போக்கு வரத்துத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. அமைச்சர் பதவியில் இருந்தபோது ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளையாக திகழ்ந்தார். பின்னர் 4லு ஆண்டுகளை கடந்த நிலையில் திடீரென அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. உடனே மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதையடுத்து தற்போது அமைச்சராக இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட செயலாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப் பட்டார். பின்னர் 2016 தேர்தலில் விஜயபாஸ்கருக்கு கரூர் தொகுதியில் சீட்டு வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி தொகுதி மாற்றி வழங்கப்பட்டது. பணப் பட்டுவாடா விவகாரத்தில் அரவக்குறிச்சி தேர்தல் தள்ளிவைக் கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது. இதற்கிடையே எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு ஜெயலலிதா போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி வழங்கினார்.
அதில் இருந்து இருவருக்கும் இடையே சரியான உறவு இல்லாமல் போய்விட்டது. வெளியில் கட்சி தலைமைக்கு பயந்து உறவாடினாலும் உள்ளுக்குள் எலியும், பூனையுமாக இருந்து வந்தனர். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் அடையவே செந்தில்பாலாஜி, சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் தீவிரமாக ஆதரிக்க தொடங்கினார். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. இதனால் தனக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த செந்தில்பாலாஜி உள்ளிட்ட 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை பறித்தார்.
கரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் முதன்மை தளகர்த்தாவும் ஆன செந்தில் பாலாஜி தி.மு.க.வுக்கு தாவ முடிவெடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக மவுனம் காத்த அவர், நேற்று முன்தினம் ஒரு திருமண விழாவில் வைத்து, ஒரு வாரத்துக்கு முன்பே  ஸ்டாலினை தான் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பு மிகவும் மகிழ்ச்சி கரமாக இருந்த தாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னும் ஓரிரு தினங்களில் ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் இணைய இருப்பதாகவும், அதன் பின்னர் ஸ்டாலினை கரூருக்கு வரவழைத்து அ.ம.மு.க.வினரை தி.மு.க.வில் இணைக்கும் பிரமாண்ட விழா நடைபெறும் என்றும் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரனுடன் அவருக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்ட பின்னர்தான் தி.மு.க.வுக்கு செல்ல செந்தில்பாலாஜி தீர்மானித் துள்ளார். ஆனால் தி.மு.க.வுக்கு தூது விடுவதற்கு முன்பே செந்தில்பாலாஜி அ.தி.மு.க. வுக்கு செல்ல தூது விட்டதாகவும், உரிய முக்கியத்துவம் தர தலைமை மறுத்ததால் தி.மு.க. பக்கம் சாய்ந்து விட்டதாகவும் அ.தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் செந்தில் பாலாஜி தரப்பினர் இதனை திட்டவட்டமாக மறுத்தனர்.
அங்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சராக இருக்கும்போது தனக்கு முக்கியத்துவம் கிடைக்காது என தெரிந்தும் எப்படி அங்கு தூதுவிடுவார். அதற்கு வாய்ப்பே இல்லை. வேண்டும் என்றே புழுதி வாரி தூற்றுகிறார்கள் என்றனர்.

Label