OUR CLIENTS
ரபேல் ஒப்பந்த விவகாரம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்- பாஜக
ரபேல் ஒப்பந்த விவகாரம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்- பாஜக Posted on 15-Dec-2018 ரபேல் ஒப்பந்த விவகாரம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்- பாஜக

புதுடெல்லி, டிச.15-

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பொய்களை பரப்பிவந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று கூறியுள்ளனர்.
ரபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதையடுத்து, ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரிக்கக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும்
இந்நிலையில், இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அமித் ஷா, ரபேல் விமான கொள்முதல் விவகாரத்தில் உண்மை வென்றுள்ளது. ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிரான மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தார்.
மேலும்,"உச்சநீதிமன்ற தீர்ப்பு பொய்யை பரப்பும் காங்கிரஸ் கட்சியின் அரசியலுக்கு கிடைத்த சரியான அடி. ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மக்களை தவறாக வழிநடத்த முயன்றது முறியடிக்கப்பட்டுள்ளது. ரபேல் போர் விமான கொள்முதல் பற்றிய பொய்ப் பரப்புரைகளை மேற்கொண்டு நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்த ராகுல்காந்தி நாட்டு மக்களிடமும், ராணுவ வீரர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார். ரபேல் விவகாரத்தில் எந்த அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார் என விளக்கம் தரவேண்டும் என்றார். இந்த தீர்ப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் பேசிய அவர், 
அரசியல் ஆதாயத் துக்காக ரபேல் போர் விமானக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசு மீது குற்றம்சாட்டினர். நாட்டையே திசைதிருப்ப முயற்சித்தனர். சர்வதேச அளவில் தேசத்தின் தோற்றத்தைச் சிதைத்தார்கள்" என்று குற்றஞ்சாட்டினார். மேலும்,"காங்கிரஸ் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தால், அதற்குப் பதிலாக பாஜக மீதும் போட்டியாக ஏதாவது குற்றச்சாட்டைக் கூறுகிறது. ரபேல் போர்விமானக் கொள்முதலில் காங்கிரஸ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேசத்தின் தோற்றத்தைச் சிதைக்க கூறப்பட்டவை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் நாடாளுமன்றத்துக்கு வந்து, தான் கூறிய குற்றச்சாட்டுக்கும், கட்சியினர் கூறியதற்கும் மன்னிப்பு கோர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இதில் பேசிய அவர், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த ஒப்பந்தம் மிகச் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளது. ரபேல் ஒப்பந்தத்திற்கு எதிராக செய்யப்பட்ட பிரச்சாரம் எல்லாம் பொய்யானது. ரபேலுக்கு எதிரான பிரச்சாரங்கள் உடனே நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.

Label