OUR CLIENTS
இஸ்ரேலின் தலைநகர் மேற்கு ஜெருசலேம்: ஆஸ்திரேலியா அங்கீகாரம்
இஸ்ரேலின் தலைநகர் மேற்கு ஜெருசலேம்: ஆஸ்திரேலியா அங்கீகாரம் Posted on 15-Dec-2018 இஸ்ரேலின் தலைநகர் மேற்கு ஜெருசலேம்: ஆஸ்திரேலியா அங்கீகாரம்

சிட்னி:-

மேற்கு ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இன்று அறிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன எல்லையில் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இரு நாடுகளும் தங்கள் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகின்றன. யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என்று இருதரப்பினரும் ஜெருசலேமை தங்கள் புனித நகரமாக கருதுவதால் இந்த 2 நாடுகள் இடையே பல வருடங்களாக சச்சரவு நீடிக்கிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதை தொடர்ந்து தலைநகர் டெல் அவிவ் –இல் இருந்த அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு இடம்மாற்றப்பட்டது.
இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவை தொடர்ந்து ஒன்றிரண்டு நாடுகள் ஜெருசலேமிற்கு இஸ்ரேல் தலைநகர் என்ற அங்கீகாரத்தை வழங்கின.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன்
‘‘மேற்கு ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரிக்கிறது. ஆனால் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படாத வரை தூதரகம் இடம்மாற்றப்படாது அதேசமயம் ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் வர்த்தக அலுவலகம் ஜெருசலேம் நகரில் அமைக்கப்படும்.’’ என அறிவித்தார்.
‘‘இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கான இரட்டை நாடுகள் கொள்கையை ஆதரிக்கும் ஆஸ்திரேலிய அரசு எதிர்காலத்தில் பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருசலேமை அங்கீகரிக்க தயாராக உள்ளது’’
‘‘ஆஸ்திரேலிய அரசு தன் நலனை கருதி மத்திய கிழக்கு நாடுகளில் தாராளமயமான ஜனநாயகத்தை ஆதரிக்கிறது. ஐநா சபையில் இஸ்ரேல் மரியாதை குறைவாக நடத்தப்படுகிறது’’ என்றும் ஸ்காட் மாரிசன் கூறினார்.
இஸ்ரேல் - பாலஸ்தீன வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக கடந்த அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்தார். அதற்கு இஸ்லாமிய நாடான இந்தோனேசியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேசமயம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சாமின் நேதான்யாஹூ இந்த முடிவை வரவேற்றார்.

Label