OUR CLIENTS
ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டும் அவலம்
ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டும் அவலம் Posted on 17-Dec-2018 ஒன்ட வந்த பிடாரி ஊர்  பிடாரியை விரட்டும் அவலம்

வேலூர், டிச.17-

வேலூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கர்ணல், பிரேமா என்பவர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆட்டையைப் போடப் பார்க்கும் அம்பாலால் குழும தலைவர் ஜவரிலால் ஜெயின் தொடர்பாக மாவட்டம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
ஒன்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டும் கதை என பலரும் உதாரணத்துக்கு சொல்வதுண்டு. பிழைக்க வந்த ஒருவர் ஊரையே வழித்து வாயில் போட்டுக்கொண்டு உள்ளூர் ஆட்களை ஒன்றுமில்லாது செய்பவரின் வரலாற்றை சொல்லி மாளாது. திட்டம்போட்டு ஏமாற்றும் சில கூட்டம், வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றும் சில கூட்டம்.  ஊரார் சொத்தை ஆட்டையைப்போடும் கூட்டங்கள் பல இருந்தாலும் சத்தமில்லாமல் மற்றவர் சொத்துக்களை ஏப்பம் விடுவதை தொழிலாகவும் அதை சாமர்த்தியமாக திறம்பட ஆட்டையைப்போட்டு  நிலத்தின் சொந்தக்காரருக்கு தெரியாமல் கைமாற்றி விடுவதிலும் படு கில்லாடியாக செயல்படுபவர்களையும் தமிழகம் கண்டுள்ளது. ஆனால் மேற்கூறிய எல்லா களவாணிகளும் பணம் சேர்ந்தபின் தங்களுக்கென ஏதாவது ஒரு தொழிலில் காலூன்றி தங்களை ஒயிட் காலராக காட்டிக்கொள்வதை பார்த்திருக்கிறோம். 
ஆனால் வட இந்தியாவிலிருந்து தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் வந்து சிறிய அளவில் தொழில் செய்ய ஆரம்பித்து படிப்படியாக இரண்டாம் நெம்பர் தொழிலில் கால்பதித்து மற்றவர்களுடைய சொத்துக்களை ஏமாற்றி வளைப்பதில் கைதேர்ந்து, பின்னர் அதுவே பிழைப்பாகி நாடி, நரம்பு, ரத்தம், சுவாசம் என அனைத்திலும் ஊரார் சொத்துக்களை ஆட்டையைப்போடும் ருசி ஊறிப்போனதால் அதையே முழு நேர தொழிலாக்கிக்கொண்டார், தன்னை ஒரு பெரிய தொழிலதிபராக வளர்த்துக்கொண்டதாக அம்பாலால் நிறுவனர் கே.ஜவுரிலால் ஜெயின் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
இவர் தனக்கென தேவைப்படும் சொத்துக்களை அடையாளம் காண பல புரோக்கர்களை வைத்துள்ளார்.  வேலூரில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்களுடன் கைகோர்த்துகொண்டு சில பல வேலைகள் செய்வதாகவும் பேசப்படுகிறது.    இதுவரை பல கோடிகள் சொத்துக்களை பினாமி பெயரில் வைத்துள்ளதாக கூறுப்படுகின்றது.  சமூகத்தில் தன்னை ஒரு வி.ஐ.பி. ஆக அடையாளப்படுத்திக் கொண்ட இவர் குடியாத்தம், வேலூர் நந்தியாலம், என மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இவரால் குவிக்கப்பட்ட சொத்துக்கள் ஏராளம், இவரால் பாதிக்கப்பட்ட பலர் குடும்பத்துடன் வேலூரை விட்டு ஓடிப்போயுள்ளனர். காரணம் இவரிடம் உள்ள அடியாட்கள். வேலூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இவருக்கு  அடியாட்கள் உள்ளனர். யாராக இருந்தாலும் மிரட்டி பணியவைப்பதில் கில்லாடியான இவரது அடாவடி திறமையின் முன் ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்றெல்லாம் ஏதுமில்லை என்றே கூறலாம்.
இவரது தற்போதைய டார்கெட் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கர்ணல், பிரேமா என்பவர்களுக்கு, சொந்தமான இடத்தை மொத்தமாக அபேஸ் செய்யும் நோக்கில் அவரை தொடர்ந்து ரவுண்டு கட்டும் ஜவரிலால், தான் செய்த தவறுகளை எல்லாம் கர்ணல், பிரேமா செய்ததாக புரளி பேசி வருகிறார் என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். 
வேலூரில் உள்ள பாலாற்றின் கரையோரம் சுமார் 20 ஏக்கர் அளவுள்ள இடம் கர்ணல், பிரேமா என்பவர்களுக்கு சொந்தமானது.  1998ல் வில்லங்கம் பார்த்து வேலூரில் சொத்து வாங்கியுள்ளார் முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் கர்ணல், மூர்த்தி மற்றும் பிரேமா. 1998ல் ஆற்காடு நவாப் வாரிசான நவாப் அலிகானிடமிருந்து  இந்த இடத்தை கிரயம் செய்தார்கள். இதையடுத்து வாங்கிய சொத்துக்களை பாதுகாக்க அரசு புல்டோசரை வரவழைத்து 2000ல் பணம் செலுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்துள்ளார். 
இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த நூருல்லா என்பவர் கர்ணலுடன் நண்பராக வலம் வந்தார்.  இதனை பயன்படுத்திகொண்டு  நூருல்லா என்பவர் மேற்கூறிய சொத்தை கைப்பற்ற நினைத்து சொத்தின் விவரத்தை சேகரித்து வைத்துக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் மேற்குறிப்பிட்ட சொத்தை எஸ¢.சையத¢ ஷா ஹ¤லால¢அகமத¢ காதா¤ சாஹெப¢ என்பவருக்கு பொது அதிகாரம் வழங்குமாறும் அவருடன் சேர்ந்து சொத்தை பராமரித்து மனைபிரித்து விற்று தருவதாகவும் கூறினார். இதனை நம்பி 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி எஸ¢.சையத¢ ஷா ஹ¤லால¢அகமத¢ காதா¤ சாஹெப¢ என்பவருக்கு  20 ஏக்கரில் 7 ஏக்கருக்கு பொது அதிகாரம் வழங்கினார் கர்ணல். அதை விற்றுத்தருமாறும் கர்ணல் கேட்டுக் கொண்டார். பொது அதிகாரம் பெற்றவுடன் அடுத்த இருதினத்தில் அந்த சொத்து தங்களுக்கு பாத்தியப்பட்டதாக கூறி 20 ஏக்கரையும் பத்திரம் பதிவு செய்துகொண்டனர். இதனை அறியாமல் கர்ணல், பிரேமா இருந்துள்ளனர். அவருடைய இடத்திற்கு சென்று வரும்போதெல்லாம், பொது அதிகாரத்தின் படி செயல்படுவதாகவும் மனை பிரிக்கும் வேலை செய்வதாகவும், பட்டா பெற நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறிவந்துள்ளனர். இவர்கள் -கூறுவதையே கர்ணல், பிரேமா அப்பாவி தனமாக நம்பிகொண்டிருந்துள்ளனர். பிறகு இவர்கள் ஏமாற்று வேலையை அறிந்து கொண்ட கர்ணல் பொதுஅதிகாரத்தை ரத்து செய்து விட்டார்.
அம்பலால் நிறுவனர் கே. ஜவுரிலால் ஜெயின் 2005ம் ஆண்டு மேற்கூறிய இடத்தை வாங்கி கிரையம் செய்தார். ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனர் எப்படி வில்லங்கச் சான்று பார்க்காமல் சொத்து வாங்குவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். வில்லங்க சான்றில் 1998ம் ஆண்டில் வாங்கியதாக கர்ணல் பிரேமா, மூர்த்தி ஆகியோர் பெயர் தெளிவாக உள்ளது. இன்று வரையிலும் வில்லங்க சான்றில் தெளிவாக உள்ளது. அதுமட்டுமின்றி 48ஏ ன் கீழ் உள்ள சொத்து, எப்படி 2005ல் மீண்டும் அதே சர்வே எண்ணுக்கு பத்திரப்பதிவு ஆனது என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அதுமட்டுமில்லாமல் 1998ம் ஆண்டு கர்ணல், பிரேமா, மூர்த்தி பத்திரப்பதிவு முத்திரைத்தாள் கட்டணத்தை விட 2005ம் ஆண்டு பத்திரப்பதிவு முத்திரைத்தாள் கட்டணத்தை ஜவுரிலால் ஜெயின் மிக மிக குறைவாக கட்டியுள்ளார். இது எப்படி சாத்தியம் என பல்வேறு வகையில் யோசித்தாலும், "பணம் பாதாளம் வரை பாய்ந்துள்ளது" என்பது தெளிவாக புரிகின்றது. 2005 ஆண்டு விக்கிரைய பத்திரத்தில் மூலபத்திரம் ஆவண எண்ணாக, அல்லாபுரத்தில் உள்ள தட்டோடு வீட்டின் அடமான பத்திர எண்ணை பயன்படுத்தி உள்ளனர்.  பத்திரப்பதிவு அலுவலகத்தை சரிகட்டிதான் 2005ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளார் என்பது தெளிவாக புரிகிறது.
அதுமட்டுமின்றி அவர்கள் வைத்திருக்கும் கடிதம், பத்திரம் எண், தேதிகள், கையொப்பம் மாறுபட்டும் முன்னுக்கு பின் முரணாகவும் உள்ளது. இதிலிருந்தே தெளிவாக புரிகின்றது போலி  ஆவணங்கள் வைத்துகொண்டு பிறர் சொத்தை உரிமை கொண்டாடுகின்றார் ஜவுரிலால் ஜெயின். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் போலி கையொப்பம் போட்டு ஆவணம் தயாரித்தது முகமது நூருல்லா. ஜவுரிலால் ஜெயின் மிகவும் கவனமாக அனைத்து விஷயங்களையும் கையாண்டுள்ளார். இதில் போலி கையொப்பம் போன்ற பிரச்சனைகளில் முகமது நூருல்லாவே சிக்குவார் என்கிறனர் விஷயம் அறிந்தவர்கள். 
 குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அம்பாலால் நிறுவனம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற நில அளவையர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரை தங்கள் நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தி கொண்டு புறம்போக்கு நிலம் எங்குள்ளதோ அதற்கு பக்கத்தில் இடம் வாங்குவதுபோல இடம் வாங்கி கொண்டு பக்கத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தையும் அபகரித்து வருகின்றனர். அந்த அம்பாலால் நிறுவனம் இதுவரை விற்பனை செய்துள்ள வீட்டுமனைகளை பார்த்தாலே தெரியும் என்கின்றனர் நன்கு விஷயம் அறிந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள். இந்நிலையில் கர்ணலுக்கு சொந்தமான இடத்தில் அவருக்கு தெரியாமல் அத்துமீறி புகுந்து அங்கிருந்த கதவுகளை உடைத்து சேதப்படுத்தி பயிர் செய்யப்பட்டிருந்த விளைபொருட்களையும் நாசப்படுத்தியுள்ளனர் ஜவரிலால் ஜெயின் ஆட்கள்.. இந்த சொத்தை ஜவரிலால் ஜெயின்  அபகரிக்க முயல்கின்றார் என்பதையறிந்த  கர்ணல், பிரேமா அந்த இடத்துக்கு கதவு போட்டு பூட்டி வைத்துள்ளார்.       
இவருடன் எப்போதுமே கூலிப்படை இயங்கி வருகிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கர்ணலுடன் இருக்கும் நண்பர்களுக்கு சமீபத்தில் போன் மூலம் மர்ம நபரால் மிரட்டல் விடப்பட்டது. அந்த மிரட்டலில் நாங்கள் தனி அரசு என்றும், அரசுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அரசுக்கு மேலான அரசு என்றும், நாங்கள் நினைத்தால் அரசையே மாற்றி அமைப்போம் என்றும் கூறிவிட்டு தேவையில்லாத விஷயத்தில் தலையிட்டீர்கள் என்றால்  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். 
 இந்த சொத்தை கைப்பற்ற நினைத்த ஜவரிலால் ஜெயின் அதிமுக குடியாத்தம் நகர செயலாளர் ஜே.கே.என்.பழனியை நாடினார். அவரும் அமைச்சர் வீரமணியை நாடினார். அமைச்சர் கர்ணல், ஜவரிலால் ஜெயின் உள்ளிட்ட இருவரையும் அழைத்து பேசினார்.  அப்போது அமைச்சர் வீரமணி கட்சிகாரர் என்றும் பாராமல், ஜவரிலால் ஜெயின் சார்பாக பேசினார். பிறகு கர்ணல் பத்திரம் உணமையென்றும்,  ஜவரிலால் ஜெயின் பத்திரத்தில் இருப்பது போலி கையெழுத்து என்பது அறியவந்தது. 
உடனே ஜவுரிலால் ஜெயினிடம் இது போன்ற தகாத வேலையை நான் செய்யமாட்டேன் என்றும், தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக நினைத்துதான் தங்களுக்கு சார்பாக பேசினேன் என்றும் கூறிவிட்டார். பிறகு இருவரிடமும் சட்டப்படி அணுகுங்கள் என்று  கூறிவிட்டார்.  ஆனால் அப்படியும் கேளாமல் ஜே.கே.என்.பழனி அமைச்சர் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் கர்ணலிடம்,  ஜவரிலால் ஜெயின் கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு சொத்தை விட்டு விட்டு செல்லுங்கள் என்று மிரட்டியுள்ளார். 
இதனையடுத்து கர்ணல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டி மனு கொடுத்துள்ளார். அத்துடன் நில அபகரிப்பு பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உள்ளாட்சி முறை மன்ற நடுவருக்கும் மனு அளித்துள்ளார் கர்ணல். அத்துடன் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார். தற்போது இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதனால்  காவல் நிலையங்களிலும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. பிரேமாவை சாதியை கூறி இழிவாக பேசியுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் உட்பட 18 பேருக்கு பிரேமா புகார் மனு கொடுத்தும் இதுநாள் வரை சிஎஸ்ஆர் கூட பதிவு செய்யவில்லை. புகார் மனு மீது இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுககப்படவில்லை. 
இதற்கிடையே நீதிமன்றத்தில் ஒருபுறம் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவரை நசுக்கப் பார்க்கிறார் அம்பாலால் குழும நிறுவனர் ஜவரிலால் ஜெயின். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், உள்ளோரை காப்பாற்றாதா?. பிரேமா கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label