OUR CLIENTS
பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை அபராதம் விதிப்பதை 6 மாதம் ஒத்திவைக்க வியாபாரிகள் கோரிக்கை!
பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை அபராதம் விதிப்பதை 6 மாதம் ஒத்திவைக்க வியாபாரிகள் கோரிக்கை! Posted on 17-Dec-2018 பிளாஸ்டிக் பொருள்கள் மீதான தடை அபராதம் விதிப்பதை 6 மாதம்  ஒத்திவைக்க வியாபாரிகள் கோரிக்கை!

வேலூர், டிச.17-

தமிழக அரசின் உத்தரவை அடுத்து பறிமுதல் செய்யப்படும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதை 6 மாத காலம் ஒத்திவைக்க வேண்டும் என வேலூரில் நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஒருமுறை உபயோகித்து, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாடுகளைத் தவிர்த்து, அதற்கான மாற்றுப்பொருள் குறித்த விழிப்புணர்வுப் பயிலரங்கம் வேலூரில்  நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்கள், அரசு சாரா பொது தொண்டு நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், சிறு வியாபாரிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்துப் பேசியது: மனிதர்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் 20 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே பயனளிக்கின்றன. ஆனால் அவை 40 முதல் நூறு ஆண்டுகள் ஆனாலும் அழிவதில்லை. மக்களிடம் இருந்து பெறும் குப்பைகளில் மக்காத குப்பைகளில் நூற்றுக்கு 7 கிலோ தான் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மீதமுள்ள 93 சதவீத பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் கலக்கின்றன. இந்நிலை தொடர்ந்தால், 2050-ம் ஆண்டு வாக்கில் கடலில் வாழும் மீன்களின் எண்ணிக்கையைவிட பிளாஸ்டிக் பொருள்களின் எண்ணிக்கையே அதிக அளவில் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகத் தடுத்திட வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, வரும் ஜனவரி 1 முதல் வேலூரை பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றிட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
முன்னதாக, நிறுவன உரிமையாளர்கள், வியாபாரிகள் கூறியது: வரும் ஜனவரி 1&ஆம் தேதி முதல் தடை செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அதில் உணவுப் பொருள்களை பொட்டலம் செய்து வைத்துள்ள (சிப்பம் கட்டுதல்) பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கவில்லை. 
ஆனால், அரசு அலுவலர்கள் அவற்றையும் பறிமுதல் செய்கின்றனர். எனவே, தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களின் பட்டியல் குறித்து அலுவலர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். தவிர, பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை குறித்து சிறு, கிராமப்புற வியாபாரிகளுக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. எனவே, பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அபராதம் விதிப்பதை மட்டும் இன்னும் 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்றனர்.
தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், இணை சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜகோபால், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ரதி, பன்னீர்செல்வம், நகராட்சி நிர்வாக மண்டல ஆணையர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Label