OUR CLIENTS
மாவட்டத்தில் கட்டுமான பணிகள் முடக்கம் மணல் குவாரி தொடங்க கோரிக்கை! ஒருபுறம் மணல் மாஃபியாக்கள் இரவில் மணல் கடத்தல்!
மாவட்டத்தில் கட்டுமான பணிகள் முடக்கம் மணல் குவாரி தொடங்க கோரிக்கை! ஒருபுறம் மணல் மாஃபியாக்கள் இரவில் மணல் கடத்தல்! Posted on 19-Dec-2018 மாவட்டத்தில் கட்டுமான பணிகள் முடக்கம் மணல் குவாரி தொடங்க கோரிக்கை! ஒருபுறம் மணல் மாஃபியாக்கள் இரவில் மணல் கடத்தல்!

விழுப்புரம், டிச.19-

 விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திருக்கோவிலூர் பகுதிகளில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது.
இந்த மணல் குவாரிகளில் இருந்து விழுப்புரம், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் மணல் ஏற்றி சென்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் விழுப்புரம் அருகே கோவிந்தபுரத்தில் செயல்பட்டு வந்த அரசு மணல் குவாரி இரண்டு ஆண்டிற்கு முன் மூடப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமான தொழில்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.இதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றுப்பகுதிகளில் இருந்து லாரிகள், மாட்டு வண்டிகள் மூலம் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லாரி மணல் 40 ஆயிரம் ரூபாய் வரையிலும் மாட்டு வண்டி மணல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. விலை கூடுதலாக இருந்தாலும் பணிகள் முடிக்க வேண்டும் என்பதால் பொதுமக்களும் கூடுதல் விலை கொடுத்து மணலை வாங்கினர்.
இந்நிலையில் மணல் திருட்டில் ஈடுபடும் லாரி மற்றும் மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் தற்போது மணல் தட்டுப்பாடு அதிகரித்து கட்டுமான பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. இதன் காரணமாக அரசு வீடு வழங்கும் திட்ட பயனாளிகள் வீடுகள் கட்ட முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். இதை தவிர்த்து அரசு பணிகளான சிமெண்ட் சாலை, சிறு, குறு பாலங்கள் கட்ட முடியாத நிலையும் நீடித்து வருகிறது. மேலும் கட்டுமான தொழில்களுடன் தொடர்புடைய தொழிலாளர்கள் இரும்பு, கம்பி, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க தற்போது 'எம்சேன்ட்' எனப்படும் ஜல்லி கிரஷர் பவுடரை கட்டுமான தொழில்களுக்கு மக்கள் பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த 'எம்சேன்ட்' 3 யூனிட், 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எம்சேன்ட் மூலம் வீடு கட்டுவதால், கட்டடத்திற்கு உறுதிதன்மை இல்லை என கட்டுமான தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.இதை தவிர்க்க விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மாட்டு வண்டி அல்லது டிராக்டர் மணல் குவாரி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் கட்டுமான தொழில்கள் மேற்கொள்ளும் வகையில் மாட்டு வண்டி அல்லது டிராக்டர் மணல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விரைவில் இரு குவாரிகள். இது குறித்து கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் அரசு மணல் குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி விழுப்புரம் அருகே உள்ள அரசமங்கலம், திருக்கோவிலூர் அருகே உள்ள அண்ராயநல்லூர் ஆகிய தென்பெண்ணை ஆற்றுப்பகுதிகளில் மணல் குவாரி அமைக்கப்படவுள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் மாட்டு வண்டி மற்றும் லாரிகளில் மணல் ஏற்றப்படும். இந்த மணல் குவாரி அமைக்கும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அரசு மணல் குவாரிகள் செயல்படும் என்றார். இது ஒருபுறம் இருக்க ஆற்றில் திருட்டு மணலை கொண்டு சென்று 3 யூனிட் மணல் ரூ.25 ஆயிரம் வரை விழுப்புரத்தில் அமோகமாக விற்பனை செய்கின்றனர் மணல் மாஃபியாக்கள். இவர்களுக்கு விழுப்புரம் காவல் துறையில் பணியாற்றும் சில கருப்பு ஆடுகள் ரூட் போட்டு சொல்லிக் கொடுத்து மணல் மாஃபியாக்கள் காவல் துறையில் சிக்காமல் இருக்க வழிவகை செய்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு மாவட்ட காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் மணல் கொள்ளை சக்கைபோடாக நடந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்துக்கு தொலைபேசி வாயிலாக இரவு நேரங்களில் தகவல் தெரிவித்தாலும் அங்கிருப்பவர்களும் மணல் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாகவே செயல்படுகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இரவு பகல் பாராமல் பம்பரமாக செயல்படுகிறார். இருந்தும் என்ன பயன். ஒருகையால் ஓசை எழுப்ப முடியவில்லை. அவரை சுற்றி பணியாற்றும் காவல் துறையினர் ஒழுங்கீனமாக நடந்து கொள்கின்றனர். காவல் துறையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர்.  
விழிமாநகரில் பலர் இப்படி இரவோடு இரவாக மணல் கடத்தல் தொழில் நடத்தி லகரங்களை வாரி குவிக்கின்றனர். காவல் துறை கடிவாளம் போட வேண்டியது காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கும், மணல் மாஃபியாக்களுக்கும்தான். மணல் மாஃபியாக்களுடன் கைகோர்த்து கொண்டு சில செய்தியாளர்களும் வலம் வருகின்றனர். அவர்களது வாகனங்கள் சிக்கி கொண்டால் உடனே சிபாரிசுக்கு வந்து விடுகின்றனர் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் பணியாற்றும் ஒரு சில கைக்கூலிகள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தாலே போதும், விழிமாநகரில் உள்ள சமூகவிரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்க முடியும் என்கின்றனர் விவரம் அறிந்த காக்கிகளும், சமூக ஆர்வலர்களும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொட்ட காரியங்கள் அனைத்தும் ஜெயமாக முடிவு பெற்றுள்ளது அனைவருக்கும் நன்கு தெரியும். விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ள களைகளை அகற்ற அவர் கையில் உள்ள சாட்டையை சுழற்றுவாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  

Label