OUR CLIENTS
மறைந்தார் மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன்!
மறைந்தார் மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன்! Posted on 20-Dec-2018 மறைந்தார் மக்கள் மருத்துவர் ஜெயச்சந்திரன்!

பெரம்பூர், டிச.20-

நம்ம ஐந்து ரூபாய் டாக்டர் இறந்துட்டாராமே? சோகத்துடன் மக்கள் கண்ணீரும் கவலையுமாக  கடைசியாக ஒரு முறை அவரை பார்க்க ஒட்டமும், நடையுமாக செல்கின்றனர்.
வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் அப்படியொரு கூட்டம், கூடியிருக்கும் எல்லோரது முகங்களிலும் கவலை, கண்ணீர், வருத்தம் மேலோங்கி காணப்படுகிறது. திடீர் மாரடைப்பு காரணமாக  இறந்து போன டாக்டர் ஜெயச்சந்திரன் (68) கடைசி நிமிடம் வரை மக்கள் மருத்துவராகவே இருந்து இறந்து போனதால் திரண்டதே இந்தக்கூட்டம்.
இந்த அளவிற்கு மக்கள் அன்பை பெற டாக்டர் ஜெயச்சந்திரன் செய்தது ஒன்றே ஒன்றுதான் அது ஏழை எளிய மக்களிடம் அன்பைப் பொழிந்ததுதான். சென்னை -புதுச்சேரி ரோட்டில் கல்பாக்கம் பக்கம் உள்ள கொடைப்பட்டினம் கிராமம்தான் இவரது சொந்த ஊர். படிப்பு வாசனையே இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்தவர், சின்ன வைத்தியம் பார்த்தால் கூட பிழைத்துக் கொள்ளக்கூடிய பலர் அந்த வாய்ப்பு கூட இல்லாமல் இறந்ததை பார்த்து வருந்தியவரின் அடிமனதில் விழுந்ததுதான் டாக்டர் கனவு. டாக்டர் படிப்பு முடிந்தவுடன் வடசென்னையில் கிளினிக் வைக்க கையில் காசில்லை, தன்னுடன் படித்த நண்பரின் தந்தை கிளினிக் வைத்துக் கொடுத்து கூடவே ஒரு நிபந்தனையும் போட்டார். இலவசமாக வைத்தியம் பார்த்தால் மரியாதை இருக்காது இரண்டு ரூபாயாவது வாங்குங்க என்றார்.
அதன்படி இரண்டு ரூபாய் வாங்கிக்கொண்டு வைத்தியம் பார்க்கத் தொடங்ங்கினர்..இரண்டு ரூபாய் வைத்தியர் என்ற பெயரில் இவர் பிரபலமானார். சமீப காலமாகத்தான் மக்களே இரண்டு ரூபாய் சில்லரை கொடுக்க சிரமமாக இருக்கிறது. ஐந்து ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஐந்து ரூபாய் கொடுத்து இரண்டு ரூபாய் டாக்டரை ஐந்து ரூபாய் டாக்டராக்கிவிட்டனர்.
மருந்து பிரதிநிதிகள் தரும் மருந்து மாத்திரைகள் மட்டுமின்றி இவரே மருந்து கம்பெனியிடம் குறைந்த விலைக்கு வாங்கி அந்த மருந்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு இலவசமாக கொடுத்துவந்தார். ஸ்கேன்,எக்ஸ்ரே எடுப்பது எலும்பு முறிவு இதய நோய் போன்ற கொஞ்சம் பெரிய பிரச்னை என்றால் சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் பேசி  குணமாகும் வரை பார்த்துக் கொண்டவர்.  வசதியுள்ளவர்கள் நிறைய பணம் கொடுக்கும் போது அதை ஏற்க மறுத்து அந்த பணத்திற்கு மருந்து மாத்திரை வாங்கித்தரச் சொல்லி அந்த மருந்துகளை ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக கொடுத்தவர்..
தமிழ் ஆர்வலர் 'மகப்பேறும் மாறாத இளமையும்,'குழந்தை நலம் உங்கள் கையில்','தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவம்','உடல் பருமன் தீமைகளும் தீர்வுகளும்' என்பது போன்ற நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளார்.  மருத்துவம் என்பது மக்களுக்கு தொண்டு செய்யக்கிடைத்த மகத்தான பணி என்று கருதி செயல்பட்ட மாமனிதரான டாக்டர் ஜெயச்சந்திரன் தனது 68 வயதில் இறந்துவிட்டார். மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்த்துமா காரணமாக சிரமப்பட்டார். இவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டர்கள் கட்டாயம் நிறைய ஓய்வு எடுக்கவேண்டும் என்று சொல்லியிருந்தனர். ஆனால் தன்னை நம்பிவரும் நோயாளிகளை தவிர்க்கமுடியாமல் தன்னை ரொம்பவே வருத்திக்கொண்டவர் எதிர்பாராதவிதமாக இறந்துபோனார்.
இன்று (20/12/2018) காலை அவரது உடல் அடக்கம் நடைபெறுகிறது. மக்களுக்காக வாழ்ந்து மக்கள் நல மருத்துவர் என்ற பெயரெடுத்த டாக்டர் ஜெயச்சந்திரன் மக்கள் மனதில் என்றும் வாழ்வார்.

Label