OUR CLIENTS
ஏகாம்பரர் சன்னிதி தெருவில் அடிக்கடி ஏற்படும் நெரிசல்!
ஏகாம்பரர் சன்னிதி தெருவில் அடிக்கடி ஏற்படும் நெரிசல்! Posted on 21-Dec-2018 ஏகாம்பரர் சன்னிதி தெருவில் அடிக்கடி ஏற்படும் நெரிசல்!

காஞ்சிபுரம், டிச.21-

ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெரு சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் பணியில் இருக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரத்தில் காமராஜர் சாலை, காந்தி சாலை ஆகிய இடங்களில் வாகன நெரிசல் வழக்கமாக உள்ளது. ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு சந்திப்பிலும் அடிக்கடி இந்நிலை ஏற்படுகிறது.வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் இத்தடத்தில் தான் அதிகம் செல்கின்றன. இதனால் காலை நேரத்தில் பள்ளி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வோர் நெரிசலில் சிக்க அவதிப்படுகின்றனர்.முக்கிய வழித்தடமாக உள்ள சன்னிதி தெரு சந்திப்பில் போக்குவரத்தை கவனிக்க போலீசார் பணியில் ஈடுபட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகளை பற்றி காவல் துறையினருக்கு கவலையே இல்லை. பணம் கிடைக்கும் இடம், அரசு உயரதிகாரிகள் செல்லும் இடங்களில் மட்டும் போக்குவரத்து காவல் துறையினர் நின்று கொண்டு போக்குவரத்தை சரி செய்கின்றனர். அதிகாரிகளுக்கு ஜால்ரா அடிப்பதும், கூஜா தூக்குவதுமாக உள்ளனரே தவிர உளப்பூர்வமாக பணியாற்ற காவல் துறையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்ஹிதிமானி காரில் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் படும் அவதி அவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் போக்குவரத்து நெரிசலில் சிக்குவோர் அவர்களாகவே போக்குவரத்தை சீர்செய்து கொண்டு வாகனங்களை இயக்கும் பரிதாப நிலை காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலை என்றுதான் மாறும் என்பது புரியாதா புதிராக உள்ளது. ஐயா என்று காவல் துறையில் பணியாற்றும் உயரதிகாரிகளை காக்காய் பிடித்து பல காரியங்களை சாதித்து கொள்கின்றனர் காவல் துறையில் பணியாற்றும் கண்ணியமிகு காக்கிகள் என்று அடித்து கூறலாம். 
இப்படி தினம் தினம் நரக வேதனை அனுபவிக்கும் பொதுமக்களை போக்குவரத்து நெரிசலில் இருந்து மீட்க மாவட்ட காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து மாதந்தோறும் நடத்தும் சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் இதுபற்றி கலந்து பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்த முயற்சி செய்யலாம். ஆனால் உருப்படியான பணிகள் நடந்ததாக தெரியவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். என்று மாவட்ட காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் காஞ்சிபுரம் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label