OUR CLIENTS
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு Posted on 22-Dec-2018 ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு

மதுரை, டிச.22-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆலையை திறப்பது தொடர்பாக வேதாந்தா நிறுவனம் நடவடிக்கை ஏதும் எடுக்க கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த பாத்திமாவின் மனுவுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதா என அரசு பதில் மனுவில் தெளிவுப்படுத்த வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் ஜனவரி மாதம் 21&ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்துள்ளது. வழக்கு மறுவிசாரணைக்கு வரும் ஜனவரி 21 வரை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
முன்னதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளி பாத்திமா ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது. 
பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பை அறிவிக்கும் முன்பே இணையதளத்தில் வெளியானது எப்படி? என்று மனுதாரர் பாத்திமா சார்பில் மூத்த வழக்கறிஞர் வைகை வாதம் செய்தார். வேதாந்தா நிறுவன உயர் அதிகாரிகள் தான் இணையதளத்தில் தீர்ப்பை பதிவேற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பே முறைகேடானது என்பதால் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
தீர்ப்பை ரத்து செய்வதுடன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்ற வாதத்தை அடுத்து தீர்ப்பாய உத்தரவை எதிர்த்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூட உத்தரவிட வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில்  குதித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்த போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அந்த ஆலையை திறக்க உத்தரவிட்டுள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 
தமிழக அரசு இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக கூறியுள்ளது. அதேநேரத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடியில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஜனவரி 21 வரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Label