OUR CLIENTS
பல நூறு கோடி ரூபாய் ஆலய சொத்துக்கள் அபகரிப்பு அதிர வைக்கும் மாஃபியாக்கள் பிடியில் சிக்கிய நிலங்கள்!
பல நூறு கோடி ரூபாய் ஆலய சொத்துக்கள் அபகரிப்பு அதிர வைக்கும் மாஃபியாக்கள் பிடியில் சிக்கிய நிலங்கள்! Posted on 24-Dec-2018 பல நூறு கோடி ரூபாய் ஆலய சொத்துக்கள் அபகரிப்பு அதிர வைக்கும் மாஃபியாக்கள் பிடியில் சிக்கிய நிலங்கள்!

வேலூர், டிச.24-

தமிழகத்தில் ஆலயச் சொத்துக்களை அபகரிக்கும் மாஃபியா கும்பல்களின் பிடியில் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் சிக்கியுள்ளன.
இவற்றை மீட்கவும் எஞ்சிய சொத்துக்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பழங்கால சுவாமி சிலைகள் கடத்தல், உண்டியல் உடைத்து காணிக்கை திருட்டு, காவலாளியை கொன்று கோவிலில் நகை, பணம் துணிகர கொள்ளை என அன்றாட  செய்திகளின் ஓர் அங்கமாக கோவில்களும் இடம் பெற்று வருகின்றன. மேற்கண்ட குற்றங்கள் அனைத்தும் பொழுது விடிந்ததும் எப்படியும் வெளியுலகிற்கு தெரிந்துவிடும், எளிதாகமறைத்துவிட முடியாது.
ஆனால் வெளியுலகம் அறியாதவாறு தமிழகம் முழுவதும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள், அரசியல் - அதிகாரம் - கிரிமினல் பின்னணி கொண்ட நிழல் உலக, மாஃபியாக்களால் திட்டமிட்டு நாள்தோறும் எங்காவது ஓர் மூலையில் அபகரிக்கப்படுகின்றன என்ற அதிர வைக்கும் தகவல் எத்தனை பேருக்கு தெரியும்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் ஏறத்தாழ 40 ஆயிரம் கோவில்கள் உள்ளன. இவற்றில் மிக பழமையான கோவில்களின் பெயரில் பக்தர்கள் தங்களது நன்செய், புன்செய் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை பல்லாண்டுகளுக்கு முன் தானமாக எழுதி வைத்துச் சென்றுள்ளனர். இதற்கான ஆதார ஆவணங்கள் அந்தந்த கோவில் நிர்வாகிகளிடமும் அறநிலைய துறை மற்றும் பதிவுத்துறையிடமும் பத்திரமாக உள்ளன.
இந்த சொத்துக்களில் பெரும்பாலானவை விவசாய நிலங்கள். விளைச்சல் மூலமாக கிடைக்கும் வருமானத்திலிருந்து சம்பந்தப் பட்ட கோவில்களின் விசேஷ கால வழிபாடுகளுக்கு செலவிடப்படுகின்றன. பல தலை முறைகளை கடந்துவிட்ட இந்த சொத்துக்களை கபளீகரம் செய்யும் மெகா திட்டத்துடன் ஆங்காங்கு கிளம்பியிருக்கிறது நில அபகரிப்பு மாஃபியா கும்பல். 
சட்டவிரோத காரியத்தையே சட்டரீதியாக செய்து முடிப்பதில் கைதேர்ந்தவர்கள் இவர்கள். இந்த கும்பல்களின் சுருட்டல் வேலைகள் மாநிலம் முழுவதும் அரங்கேறியிருந்தாலும் முதன்முறையாக இவர்களின் முகம் சென்னை அருகே காஞ்சிபுரத்தில் வெளிப்பட்டிருக்கிறது.
இம்மாவட்டத்தில் தாம்பரம் தாலுகா, மாடம்பாக்கம் கிராமத்தில் 739/1 சர்வே எண்ணில் 4.93 ஏக்கர், 739 /2 சர்வே எண்ணில் 4.93 ஏக்கர் என மொத்தம் 9.86 ஏக்கர் விவசாய நிலம் வடபழனி ஆண்டவர் தேவஸ்தானம் பெயருக்கு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சொத்துக்கள் 1937ம் ஆண்டு ஜூன் 21ல் நாகவேலு பிள்ளை என்பவரால் பங்காருசாமி நாயுடு என்பவருக்கு விற்கப்பட்டு சைதாப் பேட்டை சார் - பதிவாளர் அலுவலகத்தில் ரிஜிஸ்ட்ரேஷன் எண் 847/1937ல் பதிவு செய்யப்பட்டது.
குடும்ப வாரிசற்ற பங்காருசாமி நாயுடுவும், அவரது மனைவி ருக்மணியம்மாளும் 1943 ஜன., 17ல் தங்களது 9.93 ஏக்கர் விவசாய நிலத்தை அப்படியே வடபழனி ஆண்டவர் தேவஸ்தானம் பெயருக்கு தானமாக எழுதி வைத்து மறைந்து விட்டனர்.இந்நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஏறத்தாழ 300 கோடி ரூபாய். இதைத்தான் ஒரு கும்பல் திட்டமிட்டு முறைகேடான வழிகளை பின்பற்றி சட்ட ரீதியாக அபகரித்துள்ளது. அதற்கு சட்டத்துறையும், பதிவுத்துறையும் துணை போயிருக்கின்றன என்பது தான் உச்சக்கட்ட கொடுமை.
அதாவது இச்சொத்துக்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பே இல்லாத இரு நபர்கள் நிலத்தின் இரு சர்வே எண்களை குறிப்பிட்டு அவை தங்களுக்கு சொந்தமானவை என்றும், அந்த சொத்துக்களை பங்கிட்டுக்கொள்வதில் தங்களுக்குள் தகராறு எழுந்திருப்பதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கின்றனர். 
அந்த வழக்கு நிலுவையில் உள்ளபோதே சில நாட்கள் கழித்து தாங்களாகவே சமரசமாக பேசி முடித்து சொத்தை பங்கிட்டுக்கொள் வதாகக் கூறி மனு தாக்கல் செய்கின்றனர். அதன்படி குறிப்பிட்ட சர்வே எண்களுக்கான சொத்துக்களை இருவரும் பகிர்ந்து பத்திரம் பதிவு செய்து கொள்வதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கிறது. அந்த உத்தரவை பத்திரப்பதிவு அலுவலகத்தில் காண்பித்து தங்கள் பெயரில் அந்த சொத்துக்களை பதிவும் செய்து கொள்கின்றனர்.
பதிவுத்துறை சார் - பதிவாளரும், அந்த சொத்துக்கள் இந்த இரு நபர்களுக்கு சம்பந்தப்பட்டது தானா அதற்கான மூலப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளனரா என்பதைப் பற்றியெல்லாம்எவ்வித கவனமும் கொள்ளாமல் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று பத்திரப்பதிவு செய்து கொடுத்து விடுகிறார். இந்த துணிகர மோசடியிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. சம்பந்தப்பட்ட சொத்து இருக்கும் மாவட்டம் வேறு அதை பதிவு செய்யும் சார் - பதிவாளர் அலுவலகம் அமைந்திருக்கும் மாவட்டம் வேறு. உள்ளூரில் பதிவு செய்தால், விஷயம் அம்பலமாகி விடும் என்பதால் வேறு மாவட்டத்தில் பதிவு செய்து இந்த ஏமாற்று வேலை அரங்கேறுகிறது.
இங்கு இயல்பாகவே யாருக்கும் ஒரு கேள்வி எழும். எந்த ஒரு சொத்தையும், தனி நபர் ஒருவர் தான் விலைக்கு வாங்கும் முன் வில்லங்கம் உள்ளதா என சான்று பெற்று பரிசோதிக்கிறாரே அவ்வாறான வில்லங்க சான்றை மேற்கண்ட பத்திரப்பதிவின் போது சார் - பதிவாளர்கள் பரிசோதிக்கவில்லையா என்று சார் - பதிவாளர்கள் ஒன்றும் விபரம் அறியாதவர்கள் அல்லர். சம்பந்தப்பட்ட ஆவணங்களை பரிசோதித்து பார்த்தாலே அதுதொடர்புடைய சர்வே எண் உடைய சொத்து வடபழனி கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது என்று தெரிந்து விடும். பத்திரப்பதிவு செய்ய மறுத்துவிடலாம். ஆனால் கையூட்டு பணம், அவர்களின் கண்களை மறைக்கிறது.
கோர்ட்டே உத்தரவு போட்டு விட்டது, நாமும் லஞ்சம் வாங்கி பதிவு செய்து கொடுத்து விட வேண்டியது தான் என்ற எண்ணத்துடன் துணிகர மோசடிக்கு துணை போகின்றனர். இவ்வாறு தான் மிகவும் நுணுக்கமான சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி அபகரிக்கப்பட்டிருக்கிறது, வடபழனி கோவிலுக்குச் சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து.
இந்த நில அபகரிப்பு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்ற சம்பவம். இதே போன்றே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட தமிழகம் எங்கும் கோவில்களின் பெயரிலான சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
கோவில் சொத்து அபகரிப்பு தனி நபர்களால் நடத்தப்படுவதில்லை. நில அபகரிப்பு மாஃபியா'க்கள் நெட்வொர்க் அமைத்து செயல்படுகின்றனர். இவர்களுக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள், கிரிமினல்கள் என மூன்று முகங்கள் உள்ளன. நில அபகரிப்பை எதிர்க்கும் நபர்களை தங்களின் மோசடிக்கு ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகளை எங்கு எந்த முகத்தை காட்ட வேண்டுமோ அந்த முகத்தைக் காட்டி மிரட்டி பணிய வைக்கின்றனர். சாமானியர்களால் இக்கும்பல்களின் அட்டூழியங் களை எதிர்க்க முடியாது. சிலை கடத்தல் குற்றங்கள் மீது நீதித்துறை எவ்வாறு தனி கவனம் செலுத்தி அதிரடி உத்தரவுகளை காவல் துறைக்கு பிறப்பிக்கிறதோ அதே போன்று கோவில் சொத்துக்களை மாஃபியாக்களிடம் இருந்து காப்பாற்றவும் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பித்தால், மாஃபியாக்களின் ஆட்டம் முடிவுக்கு வரும் என்பது, பக்தர்களின் எதிர்பார்ப்பு.
தமிழக பத்திரப்பதிவுத் துறையில் தற்போது இணையதள வழியில் பத்திரபதிவு மேற் கொள்ளும் வகையில் புதிதாக ஸ்டார் 2.0 என்ற மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சொத்து முறைகேடு மற்றும் லஞ்ச புகார்களுக்கு இந்த மென்பொருள் ஓரளவு தீர்வாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த மென்பொருளில் தமிழக அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கோவில் சொத்துக்களின் சர்வே எண்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்து அதற்கான விலை நிர்ணயத்தை பூஜ்ஜியம் என வகைப்படுத்தலாம்.அதற்கான வசதிகள் மென்பொருளிலேயே உள்ளன. 
இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட கோவில் சொத்துக்களின் சர்வே எண்களின் பெயரில் யாராவது பத்திரம் தயார் செய்து, பதிவு செய்ய முயற்சித்தால் அலர்ட் குறியீடு எழுந்து அந்த முயற்சியை உடனடியாக முடக்கிவிட்டு உயரதிகாரிகளுக்கு, உஷார் தகவல், எஸ்.எம்.எஸ்., ஆகவோ அல்லது இ - மெயில் வாயிலாகவோ செல்லும் வகையில், தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தலாம். இந்நடவடிக்கைகளை அமல்படுத்தினாலே, கோவில் சொத்து அபகரிப்பை,பெருமளவு தடுத்து விட முடியும். இதற்கு, ஹிந்து சமய அறநிலையத் துறையும், பதிவுத் துறையும் கைகோர்த்து செயல் பட வேண்டும். தமிழக அரசு இதற்கான நடவடிக் கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். தமிழக பதிவுத்துறை ஐ.ஜி., குமரகுருபரன் கூறியதாவது: பதிவுதுறையில் புதிய மென் பொருள் 2.0 பயன்பாட்டிற்கு வரும் முன் பதிவுத்துறை மற்றும் வருவாய்த் துறைக்கு என தகவல் தொகுப்பு மையங்கள் தனித்தனியாக செயல்பட்டன. தற்போது இவை ஒருங்கிணைக்கப்பட்டு விட்டன. பத்திரப் பதிவுக்கு வரும் சொத்தின் உரிமையாளர் குறித்த விபரங்களை பதிவுத் துறையினரால் வருவாய்த் துறையின் தமிழ் நிலம் மென்பொருள் வழியாக உடனுக்குடன் சரிபார்க்க இயலும்.
உதாரணமாக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களின் வழிகாட்டி மதிப்பு '0' என வருவாய்த் துறை குறியிட்டுள்ளது. குறிப்பிட்ட புறம்போக்கு நிலத்தின் சர்வே எண்களை குறிப் பிட்டு யாராவது பத்திரப் பதிவுக்கு வந்தால் அந்த முயற்சியை, மென்பொருள் தடுத்து முறி யடித்து முடக்கி விடும்.
இதே வழி முறையை பின்பற்றி கோவில் சொத்துக்களையும் பாது காக்க முடியும். இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களுக்குரிய நிலம் சொத்துக்களின் சர்வே எண்க ளையும் ஒருங்கிணைந்த தகவல் தொகுப்பில் சேர்க்க வேண்டும்.
அதன்பின் யாராவது கோவில் சொத்துக்களின் சர்வே எண்களைக் குறிப்பிட்டு முறைகேடாக பத்திரம் பதிவு செய்ய வந்தால், அந்த முயற்சியை மென்பொருளே முறியடித்து முடக்கி விடும்.  இதற்கான நடவடிக்கையின் ஆயத்த பணிகளை அறநிலையத் துறை மேற்கொண்டு உள்ளது. புள்ளி விபரங்களை திரட்டும் பணி நிறைவுற்றதும் அவையும் தகவல் தொகுப்பில் சேர்க்கப்படும். இதன்மூலம் கோவில் சொத்து அபகரிப்புகள் முடிவுக்கு வரும்.இவ்வாறு குமரகுருபரன் தெரிவித்தார்.

Label