OUR CLIENTS
கஜா தாக்கிய இயற்கைப் பொக்கிஷம்! மீண்டும் புதுப்பொலிவு பெறுவது எப்போது?
கஜா தாக்கிய இயற்கைப் பொக்கிஷம்! மீண்டும் புதுப்பொலிவு பெறுவது எப்போது? Posted on 26-Dec-2018 கஜா தாக்கிய இயற்கைப் பொக்கிஷம்! மீண்டும் புதுப்பொலிவு பெறுவது எப்போது?

திருவாரூர், டிச.26-

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பரந்து விரிந்துள்ள இயற்கையின் பொக்கிஷமான அலையாத்திக் காடுகள், அண்மையில் கஜா புயலால் உருக்குலைந்துவிட்டன. இதற்கு முன்பு சுனாமியையும் பல சூறாவளியையும் சந்தித்த இந்தக் காடுகளை கஜா புயலும் விட்டு வைக்கவில்லை.
ஆசிய கண்டத்திலேயே அலையாத்திக் காடுகள் மிகப் பெரிய காடுகளாகும். உலக அளவில் இந்தக் காடுகள் 2 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 30 நாடுகளில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இத்தகைய காடுகள் 4,827 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளில் அந்தமான் தீவுப் பகுதிகளிலும் இந்தக் காடுகள் காணப்படுகின்றன. அலையாத்திக் காட்டில் 8,160 வகையான பறவைகள் உள்ளதாக ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலையாத்திக் காடுகள் அமைந்துள்ள லகூன் என்ற காயல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி வரை பல்வேறு வகையான நீர்பறவைகள் வருகின்றன. மொத்தத்தில் 147 சிற்றின வகைப் பறவைகள் இங்கு வருவதாக அறியப்பட்டுள்ளன. மிக அதிகமாக பூநாரை, கூளக்கடா, நீர்காகம், ஊசிவால்வாத்து, குளத்துகொக்கு, வெண் கொக்கு போன்றவை இந்தப் பகுதிக்கு வருகின்றன.
இந்தியாவில் முதன்முதலாக முத்துப்பேட்டை பகுதியில் மட்டும்தான் அலையாத்திக் காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் பாதைகள் அமைக்கப்பட்டும் ஓய்வெடுப்பதற்கு குடில்கள் ஏற்படுத்தப்பட்டும் சுற்றுலாப் பயணிகள் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. கஜா புயலின் கோரத் தாண்டவம் காரணமாக லட்சக்கணக்கான பறவைகள் இறந்திருக்கலாம் அல்லது பறவைகள் எங்கு இடம் மாறின என்றும் தெரியாத நிலை தொடர்கிறது. ஓநாய், மரநாய், நரி, கீரி, பழந்தின்னி வௌவால்கள், காட்டு முயல்கள் போன்ற 13 வகையான பாலூட்டிகளும் கஜா புயலில் அழிந்து விட்டன. 
இந்தப் பகுதியில் 22 குக்கிராமங்களில் உள்ள மீனவர்கள் மழைக் காலங்களில் பள்ளம் நிறைந்த சதுப்புநிலப் பகுதியில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற காலங்களில் சதுப்புநிலக் காடுகளையொட்டிய கடற்பகுதியில் மீன் பிடிக்கச் செல்கின்றனர்.
இந்த அலையாத்திக் காட்டில் 1999-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாவரங்கள் நெட்டை சுரப்புண்ணை, குட்டை சுரப்புண்ணை, சிறுகண்டல் போன்றவை நன்கு வளர்ந்து காணப்பட்டன. 
புயல் மற்றும் சூறாவளியிலிருந்தும் சுனாமியிலிருந்தும் கடலோர கிராமங்களையும் கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக இந்த அலையாத்திக் காடுகள் இருந்துள்ளன. மேலும் கடலோரங்களில் ஏற்படும் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. முத்துப்பேட்டை பகுதியில் 11 லட்சத்து 88 ஆயிரத்து 591 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இந்தக் காடுகள் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வரை பரவியுள்ளது.
காவிரி ஆற்றுப் படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்புநில அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் மேற்குப் பகுதியில் தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கோடியக்கரை பகுதி கிழக்கு வரை நீண்டுள்ளது.
2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட போது முதன்முதலில் தமிழகத்தைத் தாக்கிய பகுதி முத்துப்பேட்டைதான். அங்குள்ள அலையாத்திக் காட்டால் சுனாமியின் அலை தடுக்கப்பட்டு, இந்தப் பகுதி மக்கள் காப்பாற்றப்பட்டனர். பொதுவாக மரங்களின் வேர்கள் பூமியின் அடியில்தான் செல்லும். ஆனால், இந்த அலையாத்திக் காடுகளின் வேர்கள் பூமியிலிருந்து வானத்தை நோக்கி வந்திருப்பதைக் காண முடியும்.
இதன் மூலம் உப்பு மற்றும் கெடுதல் காற்றுகளை உறிஞ்சி நல்ல காற்றாக மாற்றி அனுப்பும் ஒரு அதிசய வேராக அலையாத்திக் காடுகள் உள்ளன. அத்துடன், உப்பு படிமத்தால் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமலும் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறாமலும் அலையாத்திக் காடுகள் பார்த்துக் கொள்கின்றன. முத்துப்பேட்டை பகுதி மக்களுக்கும் இந்தப் பகுதியின் சூழலுக்கும் பாதுகாப்பு அரணாக இருந்த இந்த அலையாத்திக் காடுகள், கஜா புயலின் கோரதாண்டவத்தில் உருக்குலைந்து நிற்கிறது. நூறாண்டுகளுக்கு மேல் வனத் துறையினரும் இயற்கை ஆர்வலர்களும் பாதுகாத்து வந்த இந்த அரிய பொக்கிஷம், கஜா புயலால் நிலைகுலைந்துவிட்டது. இந்தத் தாக்குதல் மூலம் அலையாத்திக் காடுகளின் வளர்ச்சி 25 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டது.
அலையாத்திக் காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் வனத் துறையினரால் அமைக்கப்பட்டிருந்த மர நடைபாதைகள், உயர் கோபுரங்கள், ஓய்வெடுக்க அமைக்கப்பட்டிருந்த குடில்கள் எனஅனைத்தும் முற்றிலுமாகச் சேதமாகிவிட்டன. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக அண்மையில் கட்டப்பட்ட கட்டடமும் சீர்குலைந்துள்ளது.
வனத் துறையை தமிழக அரசு முடுக்கி விட்டு பறவைகளின் பெரும்கூடமான அலையாத்திக் காடுகளை மீட்கவும், சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்திடவும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து முழு முயற்சி எடுத்தால் மட்டுமே மக்களுக்கு பெரும் அரணாக இருந்த அலையாத்திக் காடுகள் என்னும் இயற்கைப் பொக்கிஷத்தைப் பாதுகாக்க முடியும்.

Label