OUR CLIENTS
ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பேரும் பணி நீக்கம்: சுகாதாரத்துறை செயலர்
ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பேரும் பணி நீக்கம்: சுகாதாரத்துறை செயலர் Posted on 26-Dec-2018 ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பேரும் பணி நீக்கம்: சுகாதாரத்துறை செயலர்

ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் தங்கபாண்டி (27) - முத்து (23) தம்பதி. இவர்களுக்கு, ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், முத்து தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்.  பத்து நாள்களுக்கு முன், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்ற முத்துவுக்கு, ரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதாகவும், அதனால் ரத்தம் ஏற்றவேண்டும் எனவும் மருத்துவர் கூறியுள்ளார்.  
அதையடுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியிலிருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு, முத்துவுக்கு ஏற்றப்பட்டுள்ளது.  இந்நிலையில், கடந்த நவம்பர் 30 ஆம் தேதி சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்துள்ளார். ஆனால், ரமேஷ் ரத்தத்தை பரிசோதிக்காமல் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் ரத்தம் எடுத்து, சேமித்து வைத்துள்ளனர். பரிசோதிக்காத இந்த ரத்தம், சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு முத்துவுக்கு ஏற்றப்பட்டுள்ளது.   
இதனிடையே, ரத்த தானம் செய்த ரமேஷ் வெளிநாடு செல்வதற்காக, மதுரையில் மருத்துவப் பரிசோதனை செய்துள்ளார். அதில், ரமேஷுக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, ரமேஷ் சிவகாசி அரசு மருத்துவமனைக்குச் சென்று தனக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பதாகவும், தான் அளித்த ரத்தத்தை யாருக்கும் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, சிவகாசி அரசு மருத்துவமனையிலிருந்து சாத்தூர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகளில் இருந்து மக்களிடம் பெறப்பட்ட ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய  மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ரத்த வங்கித் தலைவர் சிந்தா தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஹெச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணி பெண் தன் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வந்து சாத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். 
இந்நிலையில், கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்டது தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து விருதுநகர், சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடைபெற்றது. மேலும் அவர் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணையும் அழைத்து விசாரணை நடத்தினார். 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், 
ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்ஐவி தொற்றுடைய ரத்தம் செலுத்தப்பட்டது துரதிருஷ்டவசமானது. ஹெச்ஐவி தொற்று உள்ளவர் தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே கர்ப்பிணி உட்பட 2 பேருக்கு சோதனை செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்ணை கண்காணிக்க குழு அமைக்கப்படும். கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்க ஏற்பாடு, அவர்கள் திருப்தி பெறாவிட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Label