OUR CLIENTS
வெலிங்டனில் நீர்தேக்க முடியாததால் விவசாயம் பாதிப்பு!
வெலிங்டனில் நீர்தேக்க முடியாததால் விவசாயம் பாதிப்பு! Posted on 27-Dec-2018 வெலிங்டனில் நீர்தேக்க முடியாததால் விவசாயம் பாதிப்பு!

கடலூர், டிச.27-

திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் அப்பகுதி விவசாயிகள் நலன் கருதி வெலிங்டன் நீர்தேக்கம் கடந்த 1913ம் ஆண்டு கட்டப்பட்டு 1923ம் ஆண்டு முடிவடைந்தது.

இதன் நீர்பிடிப்பு பரப்பு 16.60 சதுர கி.மீ., கரையின் நீளம் 4,300 மீட்டர் ஆகும்.ஏரியின் முழு கொள்ளளவு 2,580 மில்லியன் கன அடி. இந்நீர்தேக்கத்தின் மூலம் 11 ஆயிரத்து 222 எக்டேர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நீர்தேக்கத்தின் கரை 2100 மீட்டர் முதல் 2300 மீட்டர் வரை கடந்த 1996ம் ஆண்டு உள்வாங்கியது.இதையடுத்து அணை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையின் பேரில் உலக வங்கி நிதியின் கீழ் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செப்பனிடப்பட்டது. இருந்தும் கரை உள்வாங்குவது ஒவ்வொரு பருவமழையின் போதும் நிகழ்ந்ததால் 2007ம் ஆண்டில் ஆய்வு செய்து புனரமைக்க முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து 2009ம் ஆண்டில் 29.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை சீரமைப்பு பணி நடந்தது. 2011ம் ஆண்டு முதல் நீர்தேக்கத்தில் நீர்பிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. சில ஆண்டுகள் பருவமழை பொய்த்ததால் நீர் பிடிப்பின்றி காணப்பட்டது.
2017ம் ஆண்டு வெலிங்டன் நீர்தேக்கத்தின் ஷட்டர்கள், கரை சீரமைப்பு உள்ளிட்டவை 6.5 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது.இந்த பணி முடிந்து 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், கரையின் 1600வது மீட்டரில் கரை பதினைந்து மீட்டர் நீளம், மூன்று மீட்டர் ஆழத்திற்கு வெடிப்பு ஏற்பட்டு உள் வாங்கியது.அதையடுத்து கரையை பார்வையிட்ட அப்போதைய கலெக்டர் பிரசாந்த் வடநேரே, கரை பாதிப்பை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.பின்னர், கரை பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மீண்டும் கரையில் 3,200வது மீட்டரில் லேசான வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நிபுனர் குழுவின் ஆலோசனைப்படி மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட இடத்தில், தற்காலிகமாக 1.48 கோடி ரூபாய் மதிப்பில் ரிங் வளைவு அமைக்க முடிவெடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 1997ம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளாக கரையில் விரிசல் ஏற்படுவதும், உள்வாங்குவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நீர்தேக்கத்தின் மூலம் கிடைக்கும் நீரை நம்பியே திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் தாலுகாக்களைச் சேர்ந்த 25 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.கரை பலமிழந்ததால் முழு கொள்ளளவு நீர் பிடிக்க முடியாமல் இப்பகுதி விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெலிங்டன் கரை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும், நீர்வரத்துக்கு அரசு கூடுதல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளாக உள்ளது.இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், வெலிங்டன் நீர்தேக்கம் உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகள் கடந்து விட்டது.
 நீரை தேக்கி நிறுத்தக்கூடிய நெடுகை 2,600 மீட்டர் முதல் 3,600 மீட்டர் வரை கரையை சீரமைத்தால் மட்டுமே கரை உள்வாங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.மேலும், திட்டக்குடி பகுதியில் பெய்யக்கூடிய மழைநீர் வெலிங்டனுக்கு வந்து சேரும் பாதைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாலும், அருகிலுள்ள சிறிய ஓடைகளை வெலிங்டனுடன் இணைப்பதால் மட்டுமே கூடுதல் நீர்வரத்து கிடைக்கும் என தெரிவித்தனர்.

Label