OUR CLIENTS
கமிஷனுக்காக உயிருடன் விளையாடுவதா? 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது புகார்!
கமிஷனுக்காக உயிருடன் விளையாடுவதா? 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது புகார்! Posted on 27-Dec-2018 கமிஷனுக்காக உயிருடன் விளையாடுவதா? 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது புகார்!

திருச்சி, டிச.27-

கமிஷனுக்கு ஆசைப்பட்டு, அவசர உதவி கோரி அழைப்போரின் விபரங்களை தனியார் மருத்துவமனைகளுக்கு 108 அவசரகால ஆம்புலன்ஸ் டிரைவர்கள் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக சுகாதார துறையின் கீழ் ஜி.வி.கே., & இ.எம்.ஆர்.ஐ., என்ற நிறுவனம் இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவையில் 936 நான்கு சக்கர வாகனங்கள் 41 இருசக்கர வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.விபத்து மற்றும் பிரசவ கால நேரங்களில் 108ஐ அழைத்தால் அரசின் இலவச ஆம்புலன்ஸ் வாகனம், உரிய இடத்திற்கு சென்று உதவி தேவைப்படுவோரை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லும்.தற்போது அரசு ஆம்புலன்ஸ் வரும் முன் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வந்து பாதிக்கப்பட்டோரை தங்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விடுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் கூறியதாவது:பொதுமக்கள் 108 அவசரகால ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டதும் அருகிலுள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு தகவல் தரப்படும். அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து விடுகின்றனர். ஒரு தகவல் கொடுக்க 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கமிஷன் வாங்குகின்றனர். இம்மாதம் 19ம் தேதி, மதுரை & திருச்சி விரைவு சாலையில் சென்ற அய்யப்ப பக்தர்களின் வாகனம் விபத்துக் குள்ளானது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. உடனே 108 கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு செல்லவில்லை. தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சென்று அவர்களை தங்கள் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். இதற்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு தகவல் கொடுத்ததே காரணம். கமிஷனுக்காக சில டிரைவர்கள் இப்படி நடந்து கொள்வது தெரிந்தும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Label