OUR CLIENTS
முத்தலாக் அவசர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆஜராக உத்தரவு
முத்தலாக் அவசர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆஜராக உத்தரவு Posted on 27-Dec-2018 முத்தலாக் அவசர சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆஜராக உத்தரவு

புதுடெல்லி, டிச.27-

குடியரசுத்தலைவரின் கையொப்பத்துடன் பிறப்பிக்கப்பட்ட முத்தலாக் முறை ஒழிப்பு அவசர சட்டம் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதால் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் மதத்தினரிடையே மனைவியை கணவர் திடீரென்று விவாகரத்து செய்யும் முத்தலாக் முறையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது.
அதற்கு முன்னர் முத்தலாக் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது மக்களவையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாநிலங்களவையில் போதிய எம்.பி.க்களின் எண்ணிக்கை இல்லாததால் இந்த மசோதா அங்கு முடங்கி விட்டது.
எனவே, அவசர சட்டம் மூலம் இந்த மசோதாவுக்கு உயிரூட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. கடந்த 19-9-2018 அன்று  குடியரசுதலைவர் கையொப்பமிடப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த அவசர சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
ஆனால், குடியரசுத் தலைவர் பிறப்பிக்கப்பட்ட எந்தவொரு அவசர சட்டமும் ஆறுமாத காலத்துக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும்.
இந்நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் இன்று (27-ம் தேதி) பாராளுமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என அக்கட்சியின் பாராளுமன்ற 'கொறடா' உத்தரவு பிறப்பித்திருந்தார். இதைதொடர்ந்து, இன்று பாராளுமன்றத்தில் வெடிக்கப்போகும் சர்ச்சை என்னவாக இருக்கும்? என அரசியல் நோக்கர்கள் புருவங்களை உயர்த்தியவாறு, பரபரப்படைந்தனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் குடியரசுதலைவர் கையொப்பத்துடன் பிறப்பிக்கப்பட்ட முத்தலாக் முறை ஒழிப்பு அவசர சட்டம் இன்று மக்களவையில் மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என பாராளுமன்ற விவகாரங்கள் துறைஅமைச்சர் விஜய் கோயல் நேற்று தெரிவித்துள்ளார்.
சில திருத்தங்களுடன் நாளை தாக்கல் செய்யப்படும் முத்தலாக் முறை ஒழிப்பு அவசர சட்ட மசோதாவின்மீது காரசாரமான விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த முறையும் மக்களவையில் அல்லது மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தேவையான ஆதரவு கிடைக்கவில்லை என்றால் இந்த அவசர சட்டத்தை மேலும் 6 மாதகாலம் நீட்டிக்குமாறு குடியரசுத்தலைவர் மத்திய அரசு வலியுறுத்தவும் வாய்ப்புள்ளது, குறிப்பிடத்தக்கது.

Label