OUR CLIENTS
திண்டிவனத்திலுள்ள பழைய நீதிமன்ற கட்டடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுமா?
திண்டிவனத்திலுள்ள பழைய நீதிமன்ற கட்டடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுமா? Posted on 28-Dec-2018 திண்டிவனத்திலுள்ள பழைய நீதிமன்ற கட்டடங்கள் அரசிடம் ஒப்படைக்கப்படுமா?

திண்டிவனம், டிச.28-

திண்டிவனத்தில் பாழடைந்து வரும் பழைய நீதிமன்ற கட்டடத்தை அரசிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டிவனம் நேரு வீதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டடத்தில் குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன. குறுகிய இடத்தில் செயல்பட்டு வந்த நீதிமன்றங்கள் அனைத்தும் அமைச்சர் சண்முகத்தின் முயற்சியின் பேரில் ஜக்காம்பேட்டையில் சுமார் 19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்திற்கு கடந்த 2017 ஏப்ரல் 14ம் தேதி மாற்றப்பட்டது. புதிய நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழைய நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்த கட்டடங்கள் அனைத்தும் தற்போது வீணாக கிடக்கின்றது. இந்த கட்டடத்திற்கு பின்பக்கத்தில் நீதிபதி குடியிருப்பு உள்ளது. எந்தவித பயன்பாடும் இல்லாமல் கிடக்கும் பழைய நீதிமன்ற வளாகத்திற்குள் இரவு நேரத்தில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமின்றி பழைய நீதிமன்ற வளாகத்தில் சிலர் பகல் நேரத்தில் கிரிக்கெட் விளையாடும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள் சிறப்பு நீதிமன்ற திறப்பு விழாவில் ஐகோர்ட் தலைமை நீதிபதி விஜயா கமலேஷ் தஹில்ரமணி கலந்து கொண்டார். இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பேசும் போது  திண்டிவனத்திலுள் பழைய நீதிமன்ற கட்டடம் உள்ள பகுதியில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாகவும், அந்த கட்டடத்தை அரசிடம் ஒப்படைத்தால், அந்த இடத்தில் வேறு அரசு அலுவலகங்கள் கொண்டு வருவதற்கு உபயோகப்படும், அந்த இடத்தில் உள்ள நீதிபதிகளுக்கு புதியதாக குடியிருப்புகள் கட்டித்தருவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் சார்பில் திண்டிவனத்திலுள்ள பழைய நீதிமன்ற கட்டடங்களை அரசிடம் ஒப்படைப்பது தொடர்பான அறிக்கை: ஐகோர்ட்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இது இல்லாமல் திண்டிவனம் பொதுப்பணித்துறை அதிகாரிகளும், பழைய நீதிமன்ற கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்துவிட்டு சென்றுள்ளனர். திண்டிவனத்தில் பதிவுத்துறை அலுவலகங்கள், மின்துறை அலுவலகங்கள் என பல அரசுத்துறை அலுவலகங்கள் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றது.
இதனால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. பழைய நீதிமன்ற கட்டடங்களை அரசிடம் ஒப்படைத்தால் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அரசு அலுவலகங்கள் சொந்த இடத்தில் இயங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் திண்டிவனத்திலுள்ள பழைய நீதிமன்ற கட்டடங்களை அரசிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் என்பதே நகர பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Label