OUR CLIENTS
புத்தாண்டுக் கொண்டாட்டம்: மதுபோதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து: சென்னை காவல்துறை எச்சரிக்கை
புத்தாண்டுக் கொண்டாட்டம்: மதுபோதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து: சென்னை காவல்துறை எச்சரிக்கை Posted on 31-Dec-2018 புத்தாண்டுக் கொண்டாட்டம்: மதுபோதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து: சென்னை காவல்துறை எச்சரிக்கை

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டினால் அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 இதுகுறித்து காவல்துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னையில் புத்தாண்டையொட்டி டிசம்பர் 31ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு குவிக்கப்படுவார்கள்.
 புத்தாண்டையொட்டி, சாலை விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்கு 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் சென்னை முழுவதும் திங்கள்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பாதுகாப்புக் கருதி, முக்கியமான மேம்பாலங்கள் திங்கள்கிழமை நள்ளிரவு சில மணி நேரம் மூடப்படும்.
 இது தவிர்த்து மோட்டார் சைக்கிள் பந்தயத்தைத் தடுப்பதற்காக கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ்காந்தி சாலை, சர்தார் பட்டேல் சாலை பகுதிகளில் 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 மெரீனா, எலியட்ஸ், சாந்தோம், நீலாங்கரை கடற்கரைகளில் மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், தற்காலிக காவல் உதவி மையங்கள் செயல்படும். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். இதனால் சம்பந்தப்பட்ட நபர் காவல்துறையின் தடையில்லாச் சான்றிதழ், பாஸ்போர்ட் மற்றும் விசா பெறத் தேவையான சான்று பெறுவதில் இடர்பாடு ஏற்படும்.
 பொதுமக்கள் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும். பாதுகாப்புக் கருதி கூடுதலாக போலீஸார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுகிறார்கள். இதனால் சென்னை முழுவதும் சுமார் 15 ஆயிரம் போலீஸார் திங்கள்கிழமை இரவு இரு ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிவார்கள்.

Label