OUR CLIENTS
பனிப்போர் நடத்தும் பொன்முடி! அதிருப்தி விலகுமா? வெடிக்குமா?
பனிப்போர் நடத்தும் பொன்முடி! அதிருப்தி விலகுமா? வெடிக்குமா? Posted on 31-Dec-2018 பனிப்போர் நடத்தும் பொன்முடி! அதிருப்தி விலகுமா? வெடிக்குமா?

விழுப்புரம், டிச.31-

திமுகவில் விழுப்புரம் மாவட்டத்தில் பனிப்போர் நடத்தும் பொன்முடி மீது கழக உடன்பிறப்புகள் கடும் ஆத்திரத்திலும், ஆதங்கத்திலும் உள்ளனர். இதனால் திமுக தலைமைக்கு பொன்முடி மீது எழுந்துள்ள அதிருப்தி விலகுமா, வெடிக்குமா என்பது உடன்பிறப்புகளிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை மாறும்போது, எந்த ஒரு கட்சியிலும் அதிருப்தி மேலெழுவதைத் தவிர்க்க இயலாது. காந்திஜியின் மறைவுக்குப் பிறகு ஜவாஹர்லால் நேருவுக்கு தலைமைக்கு எதிராக அதிருப்தி எழுந்தது. ஜவாஹர்லால் நேரு மறைவுக்குப் பிறகு இந்திரா காந்தியின் தலைமைக்கு எதிராக மூத்தத் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தியால் 1969-இல் காங்கிரஸ் இரண்டாகப் பிளந்தது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கருணாநிதியின் தலைமைக்கு எதிரராக திமுகவிலும், எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் தலைமைக்கு எதிராக அதிமுகவிலும் அதிருப்திக் குரல் எழுந்ததையும், கட்சி பிளவுபட்டதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இப்போது, கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக இருக்கும் நிலையில், தலைமை மாற்றத்தால் மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்திக்கு ஆளாகியிருப்பது வியப்பளிக்கவில்லை. 
திமுக தலைமை மீதான அதிருப்தியால் முன்னாள் அமைச்சர் பொன்முடி மாவட்டச் செயலாளர் கூட்டத்தைப் புறக்கணித்ததுடன், அறிவாலயம் பக்கமும் வராமல் ஒதுங்கி இருந்து வருகிறார்.
திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியின் பரிந்துரையால் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மூலம் திமுகவுக்கு வந்தவர் என்றாலும், ஆரம்பத்தில் இருந்தே கருணாநிதியின் தீவிர ஆதரவாளராகவே பொன்முடி இருந்து வந்தார். இதன் காரணமாகவும், தனிப்பட்ட அவரது பேச்சு திறமையாலும் கட்சியில் அதி வேகத்தில் வளர்ந்து விழுப்புரம் திமுக என்றாலே அவர்தான் எனும் நிலையை எட்டினார். 
திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் பதவியையும் வகித்துள்ளார். திமுக எடுக்கும் முக்கிய முடிவுகளுக்குப் பின்னால் அவருடைய பங்களிப்பு எப்போதும் இருந்து வந்துள்ளது. தற்போது திருக்கோவிலூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருவதுடன், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராகவும் இருந்து வருகிறார். கருணாநிதியின் தீவிர ஆதரவாளர் என்ற நிலையில் இருந்து கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் உருவாகத் தொடங்கியபோது, பொன்முடி ஸ்டாலினுக்கு நெருக்கமாகி அவரின் நிழலாகவே ஆகிப் போனார். கருணாநிதியுடன் அவரது காரில் செல்ல சிலரே அனுமதிக்கப்படுவர். அதைப்போல மு.க.ஸ்டாலின் காரிலும் சிலரே அனுமதிக்கப்படுவர். அதில் ஒருவராக பொன்முடியும் செல்வாக்கு பெற்று இருந்தார். இந்தச் செல்வாக்கின் காரணமாக ஒரு கட்டத்தில் கருணாநிதிக்கு எதிராகவே அவர் பேசிய சம்பவமும் உண்டு. மு.க.ஸ்டாலினுடனான நெருக்கத்தின் காரணமாகவே இந்த அளவுக்கு பொன்முடியால் அப்போது பேச முடிந்தது.
ஆனால், அதே மு.க.ஸ்டாலின் மீதுதான் தற்போது பொன்முடி அதிருப்தியில் இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு பொருளாளராக துரைமுருகனும், முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பதவிகளைப் பிடிப்பதற்கு ஏற்கெனவே எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டிப் போட்டு வந்தனர். ஆனால், அவர்களுக்கு அளிக்காமல் கட்சியின் மூத்தவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கே அந்த வாய்ப்பை மு.க.ஸ்டாலின் வழங்கினார். எனினும், எதிர்காலத்தில் பொதுச்செயலாளர் பதவியை துரைமுருகன் பிடித்தால், பொருளாளர் பதவியை எப்படியும் பிடிக்க வேண்டும் என்ற போட்டி எ.வ.வேலுக்கும், பொன்முடிக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே பெரிய அளவில் மனத்தாங்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த தருணத்தில் எ.வ.வேலுவுக்கே மு.க.ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற வருத்தம் பொன்முடிக்கு எழுந்து, டிசம்பர் 24-ஆம் தேதி நடந்த திமுகவின் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்தக் கூட்டம் நடைபெற்ற அதே நாளில் பெரியார் நினைவு நாளும் அனுசரிக்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்த, பொன்முடி விழுப்புரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தாரே தவிர, ஏனைய தலைவர்களுடன் சென்னை நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என்று விட்டுவிட முடியாமல் மாநில அளவில் கொடுத்த பிரச்னை போதாது என்று விழுப்புரம் அளவிலும் பொன்முடிக்குப் பிரச்னை எழுந்துள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் செஞ்சி சட்டப்பேரவை உறுப்பினர் மஸ்தான். அவரின் இல்லத் திருமண விழாவுக்கு முதலில் மு.க.ஸ்டாலின் தேதி கொடுத்துள்ளார். அந்தத் தேதியில் திருமணம் நடைபெறவில்லை. அதனால், மஸ்தானுக்காக மற்றொரு தேதியை மு.க.ஸ்டாலினிடம் எ.வ.வேலு பெற்றுக் கொடுத்து, அந்த நாளில் திருமணம் நடந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொருத்தவரை பொன்முடியின் மூலமே அனைத்து செயல்பாடுகளும் இருந்து வந்தன. அதை மீறும் வகையில் எ.வ.வேலு செயல்பட்டதுடன், மு.க.ஸ்டாலின் ஒப்புதலின்பேரிலேயே அவர் செயல்பட்டிருக்கலாம் என்பதால் பொன்முடிக்கு வருத்தம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த திருமண விழாவில் அடுத்த முறை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றாலும், மஸ்தான் வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலினுடன் சபைக்குச் செல்வார் என்று எ.வ.வேலு பேசியுள்ளார். இதுவும் பொன்முடிக்கு அதிக வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
ஒரு மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் என்ற அடிப்படையில்தான் திமுகவில் அமைச்சர் பதவி அளிக்கப்படும். 
அதனால், எதிர்காலத்தில் திமுக வெற்றிபெற்றாலும் தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடாது என்பதற்காக இப்போதே தடை ஏற்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதால்தான் பொன்முடி அண்ணா அறிவாலயம் பக்கமே வராமல் ஒதுங்கி இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கருணாநிதி இருந்தபோது யாராவது மனத்தாங்கல் காரணமாக கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தால், முக்கிய நிர்வாகிகளை அனுப்பி அவர்களைச் சமாதானம் செய்வது வழக்கம். கட்சித் தலைவர் முக ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொருத்துத்தான் அதிருப்தி விலகுமா,வெடிக்குமா என்று கூற முடியும்.

Label