OUR CLIENTS
எங்கே எங்கள் வி.ஏ.ஓ.? சட்டபஞ்சாயத்து இயக்கம் நூதன பிரசாரம்!
எங்கே எங்கள் வி.ஏ.ஓ.? சட்டபஞ்சாயத்து இயக்கம் நூதன பிரசாரம்! Posted on 31-Dec-2018 எங்கே எங்கள் வி.ஏ.ஓ.? சட்டபஞ்சாயத்து இயக்கம் நூதன பிரசாரம்!

திருநெல்வேலி, டிச.31-

திருநெல்வேலியில் சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் 6ம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊழலுக்கு பெரிதும் காரணம் அரசியல்வாதிகளா? அரசு ஊழியர்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

முன்னதாக இயக்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழகத்தில் 16564 வருவாய் கிராமங்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது. கிராம நிர்வாகிகளின் பணியின் தன்மை கருத்தில் கொண்டு பணி செய்யும் கிராமத்திலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேரும் போது கிராமங்களில் தங்கி பணிபுரிகிறோம் என்ற ஒப்புதலோடு பணியில் சேருகிறார்கள். தற்போது 99சதவிகிதம் பேர் கிராமங்களில் தங்கி பணிபுரிவது இல்லை. இந்த நிலையை மாற்ற சட்டபஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் 2016ல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கிராம நிர்வாக அலுவல்கள் பணிபுரியும் கிராமங்களில் தங்கி பணிபுரிய வேண்டும் என்று உத்தரவிட்டது. 
ஆனால் பல கிராம நிர்வாக அதிகாரிகள் சட்டத்தையும் உச்சநீதிமன்ற உத்தரவையும் மதிப்பதில்லை. கஜா புயல் பாதித்த டெல்டா பகுதிகளுக்கு செல்லாத பல வி.ஏ.ஓ.,க்கள் இருக்கின்றனர். தமிழக அரசு அவர்களை ஓட்டு வங்கியாகத்தான் பார்க்கிறது. எந்த நடவடிக்கையும் எடுககாத தமிழக அரசுக்கு இயக்கத்தின் சார்பாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தங்கி பணிபுரியாத வி.ஏ.ஓ.,க்கள் விவரங்களை சேகரிக்க கையில் பைனாகுலருடன் மாநிலம் தழுவிய பிரசாரம் செய்ய இருக்கிறோம். 
அனைத்து தகவல்களையும் திரட்டிய பிறகு கிராமங்களில் தங்கி பணிபுரியாத வி.ஏ.ஒ.,க்கள் மீதும், நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக இயக்கத்தினர் தெரிவித்தனர். கையில் பைனாகுலருடனும், துண்டு பிரசுரங்களுடனும் பேட்டியளித்தனர். சட்டபஞ்சாயத்து இயக்க தலைவர் சிவ.இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Label