OUR CLIENTS
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கடலூரில் ஆய்வு!
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கடலூரில் ஆய்வு! Posted on 31-Dec-2018 திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கடலூரில் ஆய்வு!

கடலூர், டிச.31-

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் கடலூர், சிதம்பரம் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி விழுப்புரத்தில் இருந்து தனி ரயில் மூலம் கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் ரயில் நிலையத்திற்கு வருகை தந்தார். 

அப்போது  ரயில் நிலைய வளாகத்தில் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை பார்வையிட்டு உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் முன்பை விட சற்று மேம்பட்டுள்ளது. பழைய டிக்கெட் கவுன்டர் எதிரில் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக ஒரு பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.வணிக கோட்ட மேலாளர் அருண் கல்பாத்தி, பாதுகாப்பு அதிகாரி ஜெகன்நாதன் உட்பட பலர் உடனிருந்தனர். 
 திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து தண்டவாளத்தைக் கடந்து குப்பன்குளம் செல்லும் பாதையை ரயில்வே நிர்வாகம் மூட முடிவு செய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த வழியாகத் தான் அன்றாட தேவைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. பாதையை மூடுவதால் சிரமம் ஏற்படும். எனவே பாதையை மூடக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கடலூர் நகராட்சி அலுவலகத்தில் கூறி மாற்று பாதை குறித்து கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்து விட்டு சென்றார். சிதம்பரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் புதியதாக கட்டப்படும் உணவகம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள், மின் ரயில் பாதை பணிகள் போன்றவைகளை பார்வையிட்டு அதிகாரி களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
நிலையத்தில் ரயில் பாதையில் குப்பையும் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதையும் பார்த்து நிலைய மேலாளர் கனகராஜிடம் ஏன் இப்படி ரயில் நிலையத்தை வைத்துள்ளீர்கள் என கடிந்து கொண்டார். ஆய்வை முடித்துக் கொண்ட பின்னர் மயிலாடுத்துறை சென்றனர். ரயில் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஸ்டாண்ட் அருகே திறந்த வெளியில் சிறுநீர் கழித்த நான்கு பேரை ரயில்வே போலீசார் கையும் களவுமாக பிடித்து தலா 300 ரூபாய் வீதம் 1,200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Label