OUR CLIENTS
தமிழக மக்காச்சோள தட்டைகள் ஆந்திர அரசு அதிரடி கொள்முதல்!
தமிழக மக்காச்சோள தட்டைகள் ஆந்திர அரசு அதிரடி கொள்முதல்! Posted on 31-Dec-2018 தமிழக மக்காச்சோள தட்டைகள் ஆந்திர அரசு அதிரடி கொள்முதல்!

ஆத்தூர், டிச.31-

ஆந்திராவில் வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு தீவனம் இல்லாததால் தமிழகத் திலிருந்து மக்காச்சோளத் தட்டைகளை பசுந்தீவனமாக தயார் செய்து ஆந்திரா அரசு கொள்முதல் செய்து வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், தலைவாசல், தம்மம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் படைப்புழு தாக்கத்தில் மகசூல் குறைந்துவிட்டது.இதில், 60 முதல் 65 நாள் கொண்ட மக்காச்சோளப் பயிரை ஆந்திராவில் கால்நடைகளுக்கு தீவனமாக வழங்குவதற்காக கிலோ 1.50 ரூபாய் என்ற விலையில் அம்மாநில அரசு, தனியார் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்கிறது.நோய் தாக்கம் மற்றும் வறட்சியால் இங்குள்ள விவசாயிகள் மக்காச்சோளப் பயிரை விற்பனை செய்வதற்கு முன்வருகின்றனர். அதன்படி கெங்கவல்லி, வீரகனூர் பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் மக்காச்சோள பயிரை அறுவடை இயந்திரத்தில் அறுத்து மற்றொரு அரவை இயந்திரத்தில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி தீவனமாக தயார் செய்கின்றனர். அவற்றை தலா 55 முதல் 60 கிலோ அளவுக்கு பாலிதீன் பேப்பரில் பண்டல்களாக சுற்றப்பட்டு லாரிகளில் கொண்டு செல்கின்றனர். 
இதுகுறித்து ஆந்திராவை சேர்ந்த தீவனம் கொள்முதல் செய்யும் தனியார் நிறுவன அலுவலர்கள் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் வறட்சியால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்காச்சோளப் பயிர்களை தீவனமாக வழங்க அரசு முடிவு செய்து கிலோ எட்டு ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்குகிறது. இதில் அரசு மூலம் நான்கு ரூபாய் மானியம் கொடுப்பதால் விவசாயிகள் கிலோ நான்கு ரூபாய் கொடுத்து தீவனம் வாங்கிக் கொள்ளலாம். பாலிதீன் பேப்பர் சுற்றப்பட்ட பண்டல் ஓராண்டு வரை பயன்படுத்தலாம். பேப்பரை பிரித்துவிட்டால் இரண்டு மாதத்திற்குள் தீவனமாக வழங்கிட வேண்டும்.வறட்சியால் ஏக்கருக்கு எட்டு முதல் 10 டன் வரை மட்டுமே தீவனமாக கிடைக்கிறது. 60 நாளில் கதிர்கள் ஒரே சீராக வளரத் தொடங்கும்.
அறுவடைக்கு 30 முதல் 40 நாட்களுக்கு முன்பாகவே பால் மணிகளுடன் அறுவடை செய்யப்படுகிறது. தீவனமாக தயார் செய்த பண்டல்கள் லாரிகள் மூலம் கொண்டு சென்று ஆந்திரா அரசிடம் ஒப்படைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label