OUR CLIENTS
விளைநிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு 13 நாட்கள் தொடர்ந்து நடந்த விவசாயிகளின் போராட்டம் வாபஸ் ஜனவரி 3ம் தேதியிலிருந்து மீண்டும் போராட்டம்!
விளைநிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு 13 நாட்கள் தொடர்ந்து நடந்த விவசாயிகளின் போராட்டம் வாபஸ் ஜனவரி 3ம் தேதியிலிருந்து மீண்டும் போராட்டம்! Posted on 31-Dec-2018 விளைநிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு  13 நாட்கள் தொடர்ந்து நடந்த விவசாயிகளின் போராட்டம் வாபஸ் ஜனவரி 3ம் தேதியிலிருந்து மீண்டும் போராட்டம்!

திருப்பூர், டிச.31-

விளைநிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைப்பதைக் கண்டித்து திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை மாவட்ட விவசாயிகள்
14 நாட்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் மாவட்ட ஆட்சியர்களின் உறுதியை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்ட விவசாயிகள், மீண்டும் ஜனவரி 3ம் தேதியிலிருந்து சென்னையில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் வழியாக விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் தமிழக அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கேரள மாநிலத்தைப் போன்று இங்கேயும் சாலையோரமாகக் கம்பி வடம் மூலம் மின்சாரம் கொண்டுசெல்ல வலியுறுத்தியும் 13 மாவட்ட விவசாயிகள் 7 இடங்களில் காத்திருப்புப் போராட்டம், சேற்றில் நடப்பது, முகத்தில் கரி பூசிக்கொள்வது போன்று பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளிப்பாளையத்தில் 14 நாட்களாகக் காத்திருப்புப் போராட்டமும் 8 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது. இக்கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட பால்ராஜ், பச்சையப்பன் ஆகியோரின் உடல்நிலை நலிவுற்றதையடுத்து அவர்களைச் சிகிச்சைக்காகப் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உண்ணாவிரதப் போராட் டத்தைக் கைவிடுவதாக, உயர்மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்டுக் குழுத் தலைவர் கொங்கு ராஜாமணி தெரிவித்தார். விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 3ஆம் நாள் சென்னைக் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் ராஜாமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் கவுண்டனூரில் நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டத்தையும் முடித்துக் கொள்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். 2019 ஜனவரி 3இல் தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்துக் கோரிக்கை மனு அளிப்பது என்றும், கோரிக்கை நிறைவேறும் வரை கோட்டையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது என்றும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை, ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆகிய இடங்களிலும் நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
அமைச்சர் உறுதி
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எப்போது விவசாயிகள் வந்தாலும் அவர்களை அழைத்து கொண்டு முதலமைச்சரிடம் பேச தயாராக இருக்கிறோம் என்றும், தமிழக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு ஆதரவான உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆட்சியர்கள் உறுதி
நேற்று 13 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்ட  விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து உயர்மின்கோபுரம் அமைப் பதற்கு எதிராக விவசாயிகள் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெற பெறப்பட்டுள்ளது.
தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஜனவரி 3 ஆம் தேதி முதல் சென்னையில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்

Label