OUR CLIENTS
முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் மாநிலங்களவை ஒத்திவைப்பு
முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் மாநிலங்களவை ஒத்திவைப்பு Posted on 31-Dec-2018 முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் மாநிலங்களவை ஒத்திவைப்பு

முத்தலாக் தடைச் சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியால் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இப்போதைய நிலையிலேயே மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றவிட மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி உறுதிப்படத் தெரிவித்துள்ளது. 
மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையில் மசோதாவை நிறைவேற்றுவதற்கு தேவையான எம்.பி.க்களின் பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்ட மசோதா மக்களவையில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன. வாக்கெடுப்புக்கு முன்பு இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அதிமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.
மாநிலங்களவையிலும் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை இன்று தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக திங்கள்கிழமை அவைக்கு வர வேண்டும் என்று பாஜக தலைமை அறிவுறுத்தியிருந்தது.
முன்னதாக முத்தலாக் மசோதா மாநிலங்களவைக்கு வருவது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  முத்தலாக் தடை மசோதாவை இப்போது உள்ள நிலையில் நிறைவேற்ற காங்கிரஸ் உள்பட 10 எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பல்வேறு விஷயங்களில் பாஜகவை ஆதரித்து வரும் அதிமுக கூட, இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த மசோதாவில் முத்தலாக்கை குற்றச் செயலாக்கி ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழி செய்யும் பிரிவு மிகவும் தவறானது. எனவே இதனை ஆய்வு செய்ய நாடாளுமன்ற தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. இந்த விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக சட்டம் இயற்றக் கூடாது என்பதுதான் எங்களது எதிர்ப்புக்கு காரணம் என்றார்.
முன்னதாக, முத்தலாக் விவாகரத்து முறை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, முஸ்லிம் பெண் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் திருமணச் சட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது.
கடந்த செப்டம்பரில் இது அவசரச் சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், அவசர சட்டத்துக்கு மாற்றாக கடந்த 17-ஆம் தேதி முத்தலாக் தடை மசோதாவை அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் அந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதியும் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலின்பேரில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. எனினும், அரசுத் தரப்பு அதனை ஏற்கவில்லை.

Label