OUR CLIENTS
வடகிழக்குப் பருவ மழை வழக்கத்தை விட தமிழகத்தில் 24%, சென்னையில் 55% குறைவு
வடகிழக்குப் பருவ மழை வழக்கத்தை விட தமிழகத்தில் 24%, சென்னையில் 55% குறைவு Posted on 31-Dec-2018 வடகிழக்குப் பருவ மழை வழக்கத்தை விட தமிழகத்தில் 24%, சென்னையில் 55% குறைவு

சென்னை:- 

2018ம் ஆண்டு வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தை ஒட்டுமொத்தமாக ஏமாற்றிச் சென்றுள்ளது என்றால் அதனை மறுப்பதற்கில்லை.

நம்மை எந்த அளவில் ஏமாற்றியது என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று புள்ளி விவரங்களை அடுக்கினார்.
அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 89 சதவீதம் பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவோடு ஒப்பிட்டால் 24 சதவீதம் குறைவு. சென்னையில் இயல்பான அளவோடு ஒப்பிட்டால் 55 சதவீதம் குறைவாக மழை பெய்தது அதாவது 79 செ.மீ. மழைக்கு பதிலாக வெறும் 35 சதவீதம் மழையே பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இயல்பான அளவு 44 செ.மீ. மழை. இதில் 34 செ.மீ. மழைதான் பெய்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் 59% இயல்பை விட குறைவாக மழை பெய்துள்ளது. இதோடு, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் மாவட்டங்களில் இயல்பை விட 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மழை பெய்துள்ளது.
மேலும் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 40 - 50 சதவீதத்துத்துக்கும் குறைவான மழையும், 5 மாவட்டங்களில் 30 -  40 சதவீதம் குறைவாகவும், 4 மாவட்டங்களில் 20 - 30 சதவீதம் குறைவாகவும், 15 மாநிலங்களில் 1 - 19 சதவீதம் குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலியில் மட்டும் 11 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவ மழையைப் பொருத்தவரை இயல்பை விட 24 சதவீதம் மழை குறைவு. 
நீண்ட நாள் வானிலை அறிக்கையின் அடிப்படையில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. வானிலை அமைப்பு என்பது அடிப்படையான வானிலை அமைப்பு, நகர்ந்து செல்லும் வானிலை அமைப்பு என இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது.
நீண்ட நாள் வானிலை அறிக்கை என்பது வழக்கமான பருவ மழையின் அளவைக் கொண்டும், இருக்கும் சூழ்நிலையை முன்கணித்தும் கூறப்படும்.
எல் நினோ, இந்திய இருமுனை நகர்வு ஆகியவைதான் வடகிழக்குப் பருவ மழையை முன்கணிப்பு செய்யக் கூடிய முக்கிய விஷயம்.
குறுகிய கால அறிக்கை என்பது மேலடுக்கு சுழற்சி காற்றழுத்தத் தாழ்வு நிலை, தாழ்வு மண்டலம், புயல் சின்னம் போன்றவை குறித்து அறிவிப்பது.
2018ம் ஆண்டைப் பொருத்தவரை எல் நினோ உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சாதகமான இந்திய இருமுனை நிகழ்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் எல் நினோ உருவாவது தாமதமானது. இருமுனை நிகழ்வு செப்டம்பர் வரை வலுவாக இருந்தது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலுகுறைந்தது. எல்நினோவும் இல்லாத நிலையில், இருமுனை  நிகழ்வும் ஏற்படாததால், அடிப்படை வானிலை நிகழ்வு சாதகமாக இல்லாமல் போய்விட்டதே வடகிழக்குப் பருவ மழை குறையக் காரணமாகிவிட்டது.
நகர்ந்து செல்லும் வானிலை அறிக்கையைப் பொருத்தவரை 4 புயல்கள் உருவான நிலையில் கஜாவைத் தவிர மற்ற 3ம் தமிழகப் பகுதிகளில் இருந்து சாதகமில்லாத தூரத்தில் நகர்ந்து சென்றதால் காற்றின் ஈரப்பதம் குறைந்தது.
மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான வெப்பச் சலனம், வளிமண்டல மேலLக்கு சுழற்சி போன்றவை மேற்கே நகர்ந்து செல்லாத நிலையில் தமிழகத்தில் மழை குறைந்தது.
இதனால் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை 24 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது. வானிலை சாதகமாக இல்லாததால் வடகிழக்குப் பருவ மழை குறைந்தது. தமிழகத்தில் 44 செ.மீ. மழைக்கு பதில் 34 செ.மீ. மழையே பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Label