OUR CLIENTS
பிளாஸ்டிக் தடையை ஏற்கத் தயாராகும் பொதுமக்கள்: உணவகங்களில் சிக்கல் தீருமா?
பிளாஸ்டிக் தடையை ஏற்கத் தயாராகும் பொதுமக்கள்: உணவகங்களில் சிக்கல் தீருமா? Posted on 02-Jan-2019 பிளாஸ்டிக் தடையை ஏற்கத் தயாராகும் பொதுமக்கள்: உணவகங்களில் சிக்கல் தீருமா?

பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்ட முதல் நாளில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லையென்றாலும் மாற்றுப் பொருள்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள் என்றே கூறலாம்.
 தமிழகத்தில் உணவுப்பொருள்களை பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகளுக்கான பிளாஸ்டிக்குகள், கேரி பேக்குகள், உள்புறம் பிளாஸ்டிக் பூச்சுள்ள காகிதக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் கப்புகள், டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், ஸ்ட்ரா, பிளாஸ்டிக் பைகள், கட்சிகளின் தோரணம் கட்டப்பயன்படுத்தும் பிளாஸ்டிக் கொடிகள் என 14 பொருள்களுக்கு ஜன.1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது என்றும் அதற்கு மாற்றாக காகிதப்பைகள், காகிதத்தட்டுகள், காகிதச்சுருள், தாமரை இலைத்தட்டு, வாழையிலை, மரப்பொருட்கள், துணிப்பைகள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
 பொதுமக்களின் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்த உத்தரவு புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
 சென்னையில் பிரபல உணவகங்கள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் என முதல்நாளில் 50 சதவீத கடைகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருள்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக உணவுப் பொருள்களை வாழை இலையில் கட்டி துணிப் பைகளில் போட்டு வழங்கியதோடு, குழம்பு, ரசம் உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு வாடிக்கையாளர்கள் எடுத்து வந்த சில்வர் பாத்திரங்களிலும் வழங்கினர். ஆனால் இந்த நடைமுறை நடுத்தர உணவகங்கள், சாலையோர தள்ளுவண்டிக் கடைகள், பழக்கடைகளில் 20 சதவீத அளவுக்குக் கூட நடைமுறைக்கு வரவில்லை. அந்தக் கடைகளில் மீதமிருக்கும் பிளாஸ்டிக் பைகள் மூலமாக பொதுமக்களுக்குப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.
 இது குறித்து உணவக உரிமையாளர்கள் கூறுகையில், பார்சல் வழங்கும்போது சிறு, சிறு கன்டெய்னர்கள் உள்பட மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக மட்டுமே கூடுதலாக ரூ.20 வரை செலவாகிறது. ஆனால் இதை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர்.
 கூடுதல் கட்டணம் தர மறுப்புத் தெரிவிப்பதற்குப் பதிலாக அவர்கள் வீட்டிலிருந்து பாத்திரங்கள், பைகளைக் கொண்டு வருவதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றனர்.
 இதே போன்று சென்னையில் பிரபலமான டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், மளிகைக் கடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் ஒரு வாரத்துக்கு முன்பே பெரிய அளவில் அறிவிப்புப் பலகைகள் வைத்து விளம்பரப்படுத்தியதால் குறிப்பிட்ட சதவீத மக்கள் வீட்டிலிருந்து சணல், துணிப்பைகளை எடுத்து வந்திருந்தனர். அதே நேரத்தில் அந்தக் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றான பொருளிலும் பொருள்கள் வழங்கப்பட்டன. அதற்காக பை ஒன்றுக்கு ரூ.3 முதல் ரூ.6 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
 டாஸ்மாக் கடைகளைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக தண்ணீர் பாட்டில்களும், கண்ணாடி டம்ளர்களும் வழங்கப்பட்டன. இருப்பினும் வழக்கம்போல் இதற்கும் கூடுதலாக ரூ.5 முதல் ரூ.10 வரை வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
 பிளாஸ்டிக் தடைக்கு அரசு மட்டுமே முயற்சியெடுத்தால் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. தலைக்கவசம் கட்டாயத்தைப்போல அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்தால் மட்டுமே செயல்படுத்துவோம் என்றில்லாமல் நாமே அதற்கு நம்மை தயார்படுத்த வேண்டும்.
 பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, துணிப்பைகள், காகிதத்தட்டுகள், காகிதப்பைகள், தூக்குச்சட்டிகள், சில்வர் கப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்றனர்.

Label