OUR CLIENTS
தாழையூத்து அருகே விவசாய பணி பெயரில் குளங்கள் சூறையாடல்!
தாழையூத்து அருகே விவசாய பணி பெயரில் குளங்கள் சூறையாடல்! Posted on 02-Jan-2019 தாழையூத்து அருகே விவசாய பணி பெயரில் குளங்கள் சூறையாடல்!

தாழையூத்து, ஜன.2-

தாழையூத்து அருகில் விவசாய பணிகள் என்ற பெயரில் குளங்களில் உள்ள இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்திட வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாழையூத்து அருகேயுள்ள தென்கலம், நாஞ்சான்குளம் போன்ற கிராமத்து குளத்து பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விவசாயத்திற் கென்று மண் அள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் விளைநிலங்களுக்கு குளத்து பகுதியிலிருந்து வண்டல் மண் அள்ளிக்கொள்ள வருவாய்த் துறை அனுமதியளித் துள்ளது. அதிலும் டிராக்டரில் வண்டல் மண் மட்டுமே அள்ளவேண்டும், மணல் அள்ளக்கூடாது போன்ற கட்டுப்பாடு களையும் விதித்துள்ளனர். 
ஆனால் இந்த அனுமதியினை கையில் வைத்து கொண்டு சிலர் ஜேசிபி மற்றும் டிப்பர் லாரிகளின் மூலம் மணல் மற்றும் சரளை அள்ளி வெளியில் விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். ஒரு லோடு சரள் தனியாருக்கு 2000 முதல் 4000 ரூபாய் வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இந்த விதிமீறல் மண் விற்பனையால் அரசுக்கு நேரடியாக வருமானம் எதுவும் கிடைக்காத நிலையில், அதிகாரிகள் சம்மதத்தோடு இந்த கொள்ளை நடப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். குளத்திற்கான பொறுப் புகளை கையில் வைத்துள்ள பொதுப்பணித்துறையும் இதனை கண்டுகொள் வதில்லை, உள்ளாட்சி அதிகாரிகள், கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர் என ஒட்டு மொத்த வருவாய்த்துறை அதிகாரி களும் இந்த விதிமீறலை கண்டுகொள்ளாமலிருப்பது வேதனையளிப்பதாகவும் அவர்கள் கூறினர்.
நீர்நிலைகளில் உள்ள வளங்களை அள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பட்டப்பகலில் எந்த விதமான சிக்கலும் இல்லாமல் குளத்து பகுதிகளில் உள்ள மணல் மற்றும் சரள் கொள்ளை போவதும் அதனை அரசு அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் காவல்துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மாவட்ட நிர்வாகத்தின் சீர்கேட்டினை காட்டு வதாகவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, கலெக்டர் இதில் தனிக்கவனம் செலுத்தி, தாழையூத்து அருகிலுள்ள தென்கலம், நாஞ்சான்குளம் பகுதிகளில் விவசாய பணி என்ற பெயரில் விதிகளை மீறி மணல் மற்றும் சரள் அள்ளும் கொள்ளையர்களை கட்டுப்படுத்தவும் நீர் வளங்களை பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Label