OUR CLIENTS
திருவாரூர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்
திருவாரூர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர் Posted on 03-Jan-2019 திருவாரூர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியர்

'திருவாரூர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை, திருவாரூர் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால், அதை அனைத்து அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மத உணர்வை தூண்டும் வகையிலும், பிரச்னைகள் ஏற்படும் வகையிலும் செயல்பாடுகள் இருக்கக் கூடாது.  வாக்குப்பதிவு முடிவடைய நிர்ணயம் செய்யப்பட்ட 48 மணி நேரத்துக்குள் பொதுக் கூட்டங்கள் நடத்த கூடாது. வாக்காளர்களை வாகனங்களில் வாக்குச் சாவடிக்கு அழைத்து வரக் கூடாது.  
தனிப்பட்ட நபருக்கு சொந்தமான இடம், கட்டடம், சுற்றுச்சுவர் ஆகியவற்றில் அவரது அனுமதியின்றி விளம்பரம் செய்யக் கூடாது. அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் தாங்கள் நடத்த உத்தேசித்துள்ள கூட்டங்கள், ஊர்வலங்கள் குறித்தும், ஒலி பெருக்கிகள் குறித்தும் காவல் துறையிடம் ஒற்றைச்சாளர முறையில் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். போக்குவரத்து விதிகள், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை மதித்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஊர்வலங்கள் நடத்த வேண்டும். ஊர்வலங்கள் செல்லும்போது கட்சியினர் தேவையில்லாத பொருள்களையோ அல்லது தலைவர்களின் உருவ பொம்மைகளையோ எடுத்து செல்வதையோ அல்லது அதை எரிப்பதையோ தவிர்க்க வேண்டும். 
காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பிறகும் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தக் கூடாது.  அரசியல் கட்சிகள் தங்கள் அதிகாரபூர்வ பணியாளர்களுக்கு அடையாள அட்டைகளையும், பேட்ஜ்களையும் அளிக்க வேண்டும். தேர்தல் நாளில் வேட்பாளர்களின் முகாம்கள் 200 மீட்டருக்குள் அப்பால் இருக்க வேண்டும். தேர்தல் நாளில் வேட்பாளர்களின் முகாம்களில் போஸ்டர்கள், கொடிகள், சின்னங்கள் இதர பிரசார சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது. வாக்காளர்களுக்கு வழங்கும் வாக்காளர் சீட்டுகள் வெள்ளை கலரில், கட்சியின் சின்னம் மற்றும் அரசியல் வாசகங்கள் இன்றி இருக்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளில் குறைபாடுகள் இருப்பின் வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் பார்வையாளரிடம் புகார் செய்யலாம். 
அதிகாரத்தில் உள்ள கட்சி தேர்தல் நடைமுறைகளில் தனது அதிகாரத்தை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.  தேர்தல் பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்கி, அந்த அசல் அனுமதி ஆணையை வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் சலுகைகள், பணம் அல்லது வேறு ஏதேனும் முறையில் வாக்காளர்களைத் தூண்டுதல் கூடாது. விளம்பரம் செய்வது குறித்து விதிமுறைப்படி செயல்படவேண்டும் என்றார் ஆட்சியர்.  கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் துரை, திருவாரூர் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான முருகதாஸ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின் நலத்துறை அலுவலர் இருதயராஜ், மன்னார்குடி கோட்டாட்சியர் பத்மாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

Label