OUR CLIENTS
திருவாரூர் தி.மு.க., வேட்பாளர் யார்? குடும்பத்தினர் விருப்பத்தால் குழப்பம்!
திருவாரூர் தி.மு.க., வேட்பாளர் யார்? குடும்பத்தினர் விருப்பத்தால் குழப்பம்! Posted on 03-Jan-2019 திருவாரூர் தி.மு.க., வேட்பாளர் யார்? குடும்பத்தினர் விருப்பத்தால் குழப்பம்!

திருவாரூர், ஜன.3-

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் குடும்பத்தினர் விரும்புவதால் தி.மு.க., வேட்பாளர் யார் என்ற குழப்பம் அக்கட்சியில் உருவாகி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த தொகுதி திருவாரூர். இரு முறை இங்கு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் வரும் 28ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தி.மு.க., தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் இந்த தொகுதியை கைப்பற்றுவதில் அவர் தீவிரமாக உள்ளார். கடந்த 2016 சட்டசபை தேர்தலில் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் கருணாநிதி வெற்றி பெற்றார். எனவே இந்த தொகுதியில் அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் போட்டியிட வேண்டும். தொகுதி வெளி நபரிடம் சென்றுவிடக் கூடாது என கட்சி தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையில் கருணாநிதியின் மகள் செல்வியை போட்டியிட வைக்கலாம் என கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி உள்ளனர். 
அதே நேரத்தில் திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைவாணன் அத்தொகுதியின் பொறுப்பாளராக பணியாற்றி இருப்பதால் அவருக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது என்ற பேச்சும் அடிப்படுகிறது. ஆனால் கலைவாணனுக்கு சொந்த சமுதாயத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. அவர் மீது சில வழக்குகள் உள்ளதால் அவரை நிறுத்த வேண்டாம் என அவருக்கு எதிரான கோஷ்டியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டில் நேற்று தேர்தல் தொடர்பான ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனையில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர். திருவாரூர் தொகுதியில் போட்டியிட விரும்புவோரிடம் இன்றும், நாளையும், விருப்ப மனு பெறப்படுகிறது. 
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 4ம் தேதி நடக்கிறது. அதுவரை யார் வேட்பாளர் என்ற குழப்பம் நீடிக்கவே வாய்ப்பு உள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை, ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்த போது அங்கு போட்டியிட நடிகர் விஷால் வேட்புமனுத் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் போட்டியிட முடியவில்லை. தற்போது திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விஷால் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் திருவாரூர் தொகுதியில் குறிப்பிடும்படியாக எந்த சமூகத்தினரின் ஓட்டுகளும் பெரிய அளவில் இல்லை. எனவே பதிவாகும் ஓட்டுகளில் 20 சதவீதம் வாங்கினால் போதும். லோக்சபா தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என விஷால் கருதுகிறார். அத்துடன் தான் போட்டியிட்டால் மக்கள் நீதிமையம், ரஜினி மக்கள் மன்றம் ஆகியவற்றின் ஆதரவை பெற முடியும் என்றும் அவர் கணக்கு போட்டுள்ளார்.

Label