OUR CLIENTS
தொழில் முனைவோருக்கு கூடுதல் கடன் தர வங்கிகள் தயார் அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்!
தொழில் முனைவோருக்கு கூடுதல் கடன் தர வங்கிகள் தயார் அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்! Posted on 03-Jan-2019 தொழில் முனைவோருக்கு கூடுதல் கடன் தர வங்கிகள் தயார் அமைச்சர் கே.சி.வீரமணி தகவல்!

வேலூர், ஜன.3-

கடன் நிலுவையில் இருந்தாலும் தொழில்முனைவோருக்கு கூடுதல் கடன் தர வங்கிகள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தெரிவித்தார்.

சென்னையில் ஜனவரி 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் வேலூரில்  நடைபெற்றது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் ஜனவரி 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் அதிக அளவில் முதலீட்டாளர்கள் பங்கேற்கவும், தொழில் முதலீடுகளைத் திரட்டவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கென மாவட்ட அளவிலான சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். 
வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் வீரமணி பேசுகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் நோக்கம் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களிடையே அதிகப்படியான விழிப் புணர்வை ஏற்படுத்துவதும், உள்ளூர் வர்த்தகத்தைப் பொறுத்து நடுத்தரத் தொழில்களை பெருக் கிடவும், வருங்கால முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் பெறுவதே ஆகும். 
ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டுக்கு ரூ. 1,800 கோடி இலக்கு எட்டப்பட்டு, தற்போது, அந்த இலக்கையும் தாண்டி, ரூ. 2,085 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கடன் நிலுவையில் அதிகமாக இருந்தாலும், கூடுதல் கடன் தர வங்கிகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் பேசுகையில், படித்த முதல் தலைமுறையினரை ஊக்கப்படுத்த நீட்ஸ் திட்டத்தின்கீழ், அதிகபட்ச கடன் உச்சவரம்பு ஒரு கோடியிலிருந்து ரூ. 5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ. 25 லட்சத்திலிருந்து, தற்போது ரூ. 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மகளிர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் தொழில் முனைவோர்களில் தகுதியான இயந்திரத் தளவாடங்கள் மீது 5 விழுக்காடு அல்லது ரூ. 2 லட்சம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மென் மற்றும் மின்னணுப் பொருள்கள், தோல் பொருள்கள், வாகன உதிரி பாகங்கள், ஆயத்த ஆடைகள், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பொருள்கள் மீது சிறப்பு வகை உற்பத்தி நிறுவனங்கள் கூடுதல் முதலீட்டு மானியம் பெற தகுதியானவையாகும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசுகையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை கொண்டு பொருள் ஈட்டுவது முதலீட்டாளர்களுக்கு சாதகமாக அமையும். அதே நேரத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிட முடியும். சென்னையில் நடைபெறவுள்ள மாநாட்டில் தொழில் முதலீட்டாளர்களைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவதற்கு இக்கருத்தரங்கமானது நடத்தப்படுகிறது என்றார்.
இதில் எம்எல்ஏக்கள் சு. ரவி, லோகநாதன், மாவட்டத் தொழில் மைய மேலாளர் மணிவண்ணன், ஆவின் தலைவர் வேலழகன், மண்டல மேலாளர் சுந்தரராஜன் (இந்தியன் வங்கி), திலகராஜன் (கனரா வங்கி), சேதுமுருகதுரை(பாரத ஸ்டேட் வங்கி), கோபாலகிருஷ்ணன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), தமிழ்நாடு குறு மற்றும் சிறு தொழிலாளர்கள் சங்க துணைத் தலைவர் அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Label