OUR CLIENTS
மணல் தட்டுப்பாட்டால் வீடு கட்டும் பயனாளிகள் திணறல் மாட்டுவண்டி குவாரி தொடங்க பொதுமக்கள் கோரிக்கை!
மணல் தட்டுப்பாட்டால் வீடு கட்டும் பயனாளிகள் திணறல் மாட்டுவண்டி குவாரி தொடங்க பொதுமக்கள் கோரிக்கை! Posted on 04-Jan-2019 மணல் தட்டுப்பாட்டால் வீடு கட்டும் பயனாளிகள் திணறல் மாட்டுவண்டி குவாரி தொடங்க பொதுமக்கள் கோரிக்கை!

கடலூர், ஜன.4-

கடலூர் மாவட்டத்தில் மணல் குவாரிகள் திறக்காததால் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டால் இலவச வீடுகள் கட்டும் பயனாளிகள் பணிகளை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலால் கூரை வீடுகள் கடும் சேதமடைந்தன. இதனால் கூரை வீட்டில் வசித்தவர்கள் நிர்கதியாய் நின்றனர். இதனையறிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கினார். 
அதன்படி மாவட்டம் முழுவதும் வீடற்றவர்கள் அனுமதி பெற்று வீடு கட்டி வருகின்றனர்.குறிப்பாக குறிஞ்சிப்பாடி, கடலூர் ஊராட்சி ஒன்றியங்களில் அதிகளவு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டன. அதன்படி பயனாளிகள் ஆர்வத்துடன் வீடுகள் கட்ட துவங்கினர். பல பயனாளிகள் அரசு அனுமதித்த பரப்பை விட கூடுதலாக போட்டு வீடுகளை கட்டினர். தானே புயல் ஓய்ந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில் தானே திட்டத்திற்காக போடப்பட்ட அதிகாரிகள் திரும்ப பெறப்பட்டு விட்டனர்.அதேப்போன்று ஐ.ஏ.ஒய்., திட்டத்தில் வீடு கட்டும் திட்டம், பசுமை வீடு கட்டும் திட்டம் போன்ற திட்டங்களிலும் பொது மக்கள் அனுமதி பெற்று வீடுகளை கட்டி வருகின்றனர். இதனிடையே கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து விட்டன. 
மேலும் அரசு வழங்கும் உதவித்தொகை வீடு கட்டுவதற்கு போதுமானதாக இல்லை.மேலும் மணல் குவாரிகள் செயல்படாததால் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமானப்பணி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 30 சதவீதத்திற்கு மேல் வீடுகள் கட்டுமான பணி முடியாமல் அரைகுறையாக உள்ளது.இதனால் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. அதனால் அரசு திட்டங்கள் மூலம் வீடு கட்டுவதற்கு மணல் தட்டுப்பாடு உள்ளது. எனவே இதற்கென தனியாக குவாரி அமைத்து மணல் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என கலெக்டரிடம் முறையிட்டனர்.
அதன்படி கலெக்டர், மாட்டு வண்டி மணல் குவாரிக்கு ஏற்பாடு செய்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலத்தில் பொது மக்களின் பலத்த எதிர்ப்புகளிடையே குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மாவட்டத்தில் பண்ருட்டி அடுத்த எனதிரிமங்கலம், சேத்தியாதோப்பு அடுத்த மிராளூர் ஆகிய இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.மேலும், முட்டம் உட்பட சில இடங்களில் மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளன. கடலூர் பகுதியில் மாட்டு வண்டி குவாரி திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் மணல் தட்டுப்பாடு நீங்கும்' என்றார்.
ஆனால் கடலூர் மாவட்டத்தில் வீடு கட்டும் பயனாளிகள் மணல் குவாரிகள் அனைத்து ஆன் லைனில் பதிவு செய்யப்படுகின்றன. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மூப்பு அடிப்படையில்தான் தற்போது வரை மணல் வழங்கப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களின் மணல் தேவையை பூர்த்தி செய்வதில்லை.எனவே உள்ளூர் மக்களுக்கும் தேவையான மணலை வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே மாட்டு வண்டி குவாரி திறந்து எளிய முறையில் மணல் கிடைத்தால்தான் இலவச வீடுகளைக் கட்டும் பயனாளிகள் தடையின்றி கட்டி முடிக்க முடியும்.

Label