OUR CLIENTS
காட்சி பொருளான தானியங்கி சிக்னல்கள்!
காட்சி பொருளான தானியங்கி சிக்னல்கள்! Posted on 04-Jan-2019 காட்சி பொருளான  தானியங்கி சிக்னல்கள்!

திருவள்ளூர், ஜன.4-

திருவள்ளூர் நகரில் போக்குவரத்தை சீரமைக்க அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல்கள் செயல்படாமல் வெறும் காட்சி பொருளாக மாறி விட்டன.

திருவள்ளூர் நகரம், மாவட்ட தலைநகராகவும் திகழ்கிறது. மாவட்ட ஆட்சியர், காவல் அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள் உள்ளன.பிரசித்தி பெற்ற கோவில்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் வங்கிகள், தனியார் அலுவலகங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னையில் இருந்து, திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள், திருவள்ளூர் நகரை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால், திருவள்ளூர் நகரில், தினசரி, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அதிகளவில் ஆட்டோக்களும் இயக்கப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.போக்குவரத்தை சீரமைக்கவும், விபத்துகளை தவிர்க்கவும், ஜே.என்.சாலையில் ஆயில் மில், அரசு மருத்துவமனை, ஆவடி சாலை சந்திப்பு, உழவர் சந்தை, காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர்., சிலை, ஆட்சியர் மற்றும் எஸ்.பி., அலுவலகம், டோல்கேட், தேரடி, செங்குன்றம் சாலை சந்திப்பு, மணவாள நகர் சந்திப்பு உள்ளிட்ட, 14 இடங்களில், தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
ஆனால், தற்போது, காமராஜர் சாலை சந்திப்பு, ஆவடி சாலை சந்திப்பு ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தானியங்கி சிக்னல் வேலை செய்கிறது. மற்ற இடங்களில் உள்ள அனைத்து சிக்னல்களும் பயன்படாமல், வெறும் காட்சி பொருளாக தான் உள்ளன.உதாரணமாக, ஆட்சியர் அலுவலகத்திற்கும், மாவட்ட காவல் துறை அலுவலகத்திற்கும் செல்லும் இடங்களில், உள்ள தானியங்கி சிக்னல் செயல்படுவதில்லை. இதனால், எதிர் சாலையில் இருந்து மேற்கண்ட அலுவலகங்களுக்கு திரும்பும் வாகனங்கள், விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது.மேலும், அரசு பணமும் வீணாகி, எந்த நோக்கித்திற்கு அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல், உள்ளது.எனவே, தானியங்கி சிக்னல்களை முறையாக பராமரித்து, செயல்படுத்தினால், விபத்துகளும், நெரிசலும் குறையும்.

Label