OUR CLIENTS
பயணிகளை மிரட்டும் ஓட்டை உடைசல் பேருந்துகள்!
பயணிகளை மிரட்டும் ஓட்டை உடைசல் பேருந்துகள்! Posted on 04-Jan-2019 பயணிகளை மிரட்டும்  ஓட்டை உடைசல் பேருந்துகள்!

வேலூர், ஜன.4-

வேலூர் மாவட்டம் வேலூரில் அரசு போக்குவரத்து கழக நகரப்பேருந்து காட்பாடி பாகாயம் வழித் தடத்தில் இயங்கிவரும் (ஜிழி.23ழி,1588 ).

 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாகாயம் பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பேருந்தின் டீசல் டேங்க் திடீரென பெரும் சத்தத்துடன் பேருந்தின் அடியில் தொங்கியபடி சாலையில்  இழுத்துச் சென்று கொண்டிருந்தது. இதற்கிடையே திடீர் சத்தத்தை கேட்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பயணிகள் என்னவோ ஏதோ என பதறியடித்துக்கொண்டு இறங்கி ஓட்ட மெடுத்தனர்.   பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்நிகழ்வு அடிக்கடி நடக்கிறது. அதாவது வேலூர் மாநகரில் ஏதாவது ஒரு இடத்தில் அரசுப்பேருந்து இப்படி பழுதாகி நிற்பது தினசரி வாடிக்கையாக உள்ளது. டீசல் டேங்க் சாலையில் தொங்கியதை பொதுமக்கள் பார்த்தவாறு சென்றனர்.
ஆனால் அது திடீரென நடக்கவில்லை என போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே அந்த டேங்க்கை தாங்கிப்பிடிக்கும் இரும்புப் பட்டை பழுதாகியுள்ளது. அதை சரி செய்யாமல் ஒரு துண்டு வயர் மூலம் கட்டி பேருந்தை இயக்கி வந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த டேங்க் பேருந்தின் அடியிலிருந்து சாலையில் விழுந்தபோது டீசல் ஒழுகியது. தீப்பொறி பறந்ததும் ஓட்டுநர் சட்டென பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மாதந்தோறும் இந்த பேருந்துகளை பராமரிக்க என பல லட்சங்களை கணக்கில் காட்டும் இந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக (விழுப்புரம்) கோட்ட நிர்வாகம், மற்றும் பொது மேலாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பேருந்துகளின் பராமரிப்புக்கான பணம் என்ன ஆனது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
அண்டை மாநிலங்களில் உயர்தரப் பேருந்துகளை வழித்தடங்களில் இயக்கிவரும் நிலையில், விளக்கில்லாமல், பிரேக் பிடிக்காத, மழை பெய்தால் ஒழுகுவதும், பாழடைந்த பேருந்துகளை மீண்டும் மீண்டும் தொடர்ந்து இயக்கி சாதனை படைக்கும் தமிழ்நாடு (விழுப்புரம் கோட்ட) அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திறம்பட இயக்கும் திறமையை வியக்காமல் என்ன செய்வது?. 
இப்படி விபத்து ஏற்படும் நிலையில் அபாயகரமான நிலையில் இயங்கும் பேருந்துகளுக்கு இன்சூரன்ஸ் உண்டா? ஆம் எனில் எந்த தரத்தின் அடிப்படையில் இன்சூரன்ஸ் போடப்பட்டது. பயணிகளின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளின் அக்கரை இவ்வளவுதானா? மறக்காமல் கட்டணத்தை மட்டும் உயர்த்த தெரியும் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பயணிகளின் சௌகரியம் குறித்து சிந்திக்கத் தெரியாதா?. இப்படியே போனால் நிலைமை படுமோசமாகி விடும். பேருந்தில் பயணம் செய்வதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க நேரிடும் என்பது மட்டும் நிச்சயம்.

Label