OUR CLIENTS
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை எதிரொலி: காகிதப் பைகளின் விலை 2 மடங்கு உயர்வு
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை எதிரொலி: காகிதப் பைகளின் விலை 2 மடங்கு உயர்வு Posted on 05-Jan-2019 பிளாஸ்டிக் பைகளுக்கு தடை எதிரொலி: காகிதப் பைகளின் விலை 2 மடங்கு உயர்வு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கான தடை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அதற்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வரும் காகிதப் பைகளின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, மளிகைக் கடைகள் முதல் ஜவுளிக் கடைகள் வரை பிளாஸ்டிக் பைகளுக்கான மாற்றை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பிளாஸ்டிக் பைகளில் எளிதாக பொருள்களை வழங்கி வந்த மளிகை கடைக்காரர்கள், மீண்டும் காகிதத்தில் பொட்டலம் போட்டுக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
பிளாஸ்டிக் பை ஒழிப்பால் நீண்ட இடைவெளிக்குப் பின் காகிதப் பைகளுக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரை கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த காகிதப் பைகள், தேவை அதிகரிப்பால் தற்போது ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.8 விலையில் காகிதப் பைகளும், ரூ.18 மற்றும் ரூ.25 விலையில் துணிப் பைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. 
சாலையோர உணவகங்களில் ரூ.5 விலை உயர்வு: சாலையோர உணவகங்களிலும், பிளாஸ்டிக் தாள்களுக்குப் பதிலாக தற்போது மீண்டும் இலையை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் உணவுக்கான விலை ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. சில பாதிப்புகள் இருந்தாலும், பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுதொடர்பாக திண்டுக்கல்லைச் சேர்ந்த பொரி மற்றும் கடலை விற்பனையாளர் த.கார்த்திக் கூறியது:
பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை தீவிரமாக அமல்படுத்தப்பட்டிருப்பதால், 4 நாள்களிலேயே பொதுமக்களிடம் பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. 
கடந்த 6 மாதங்களுக்கு முன், தமிழக அரசு பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன், 1000 காகிதப் பைகளை ரூ.350 விலைக்கு வாங்கி பயன்படுத்த தொடங்கினேன். ஆனால், பிற கடைகளில் பிளாஸ்டிக் பைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால், காகித பைகளை ஒதுக்கிவிட்டு நானும் பிளாஸ்டிக் பைகளில் பொருள்களை வழங்கினேன். 
தற்போது பிளாஸ்டிக் மீதான தடை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், காகிதப் பைகளின் விலை அதிகரித்துள்ளது. 
10 நாள்களுக்கு முன்பாக ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 1 கிலோ காகிதப் பை, தற்போது ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.
இதனால், பழைய செய்தித்தாள்களின் கொள்முதல் விலையும் விரைவில் உயரும். அதேபோல், பிளாஸ்டிக் பைகளில் தின்பண்டங்களை அடைத்து விற்பனை செய்வதையும் தடை செய்ய வேண்டும் என்றார்.
அதிகரிக்கும் துணிப் பைகளின் பயன்பாடு
துணிப் பைகளை விலை கொடுத்துவாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் குறைந்து வருகிறது. இதுகுறித்து பல்பொருள் அங்காடிக்கு பொருள்கள் வாங்க வந்த பேராசிரியர் க.மணிவண்ணன் கூறியது:
பல்பொருள் அங்காடிகளுக்கு சென்று, பிளாஸ்டிக் பைகளில் பொருள்களை வாங்கிப் பழகியவர்கள், தற்போதும் பையை எடுத்துச் செல்ல மறந்துவிடுகின்றனர். பறிமுதல், அபராதம் என அதிரடி உத்தரவால், பல்பொருள் அங்காடிகளும் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தவிர்த்து விடுகின்றன. இதனால், பையை மறந்தவர்கள், அதற்கான அபராதமாக துணிப் பையை விலைகொடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், துணிப் பைகள் பாதுகாக்கப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்படும் என்பதால், பிளாஸ்டிக் குப்பைகளும் விரைவில் குறையும் என்றார்.

Label