OUR CLIENTS
உயிர் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் உரிய கல்வித் தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி?: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
உயிர் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் உரிய கல்வித் தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி?: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி Posted on 05-Jan-2019 உயிர் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் உரிய கல்வித் தகுதியில்லாதவர்களை நியமித்தது எப்படி?: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ரத்த வங்கிகளில் உயிர் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் உரிய கல்வித் தகுதி இல்லாதவர்களை நியமித்தது எப்படி என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
இதுகுறித்து அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அரசு வழக்குரைஞருக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டனர்.
மதுரை, அண்ணாநகரைச் சேர்ந்த வழக்குரைஞர் முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் ஹெச்ஐவி பரவுவதைத் தடுத்தல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு தகுந்த சிகிச்சை, ஆலோசனை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்துக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இப்பணிகளை எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் சரியாக மேற்கொள்வதில்லை.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிச் சிறுமிகள் இருவருக்கு ஹெச்ஐவி இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கையிலும் ஒரு சிறுமிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. இப்போது சாத்தூரில் கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை செலுத்தியுள்ளனர். 
ரத்த வங்கிகள் முறையாக கண்காணிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் பல அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வருகின்றன. இந்த வங்கிகளில் உரிய கல்வித்தகுதி இல்லாத ஒப்பந்த பணியாளர்களே பணியில் உள்ளனர். இதனால் ரத்தம் தேவைப்படும் ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
தானமாக பெறப்படும் ரத்தம், மருத்துவத்துறையினர் அலட்சியத்தாலும், அதிகாரிகளின் கவனக்குறைவாலும் வீணடிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகளை கண்காணிக்கவும், ரத்தம் கொடுப்பவர்கள், பெறுவோரின் விவரங்களைப் பராமரிக்கவும், லாப நோக்கத்தில் செயல்படும் ரத்த வங்கிகளின் உரிமத்தை ரத்து செய்யவும், உரிய கல்வித் தகுதி இல்லாத பணியாளர்களை நீக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்பையா, பி. புகழேந்தி அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ரத்த வங்கிகள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையங்களில் பணியாற்றும் பலர், உரிய கல்வித் தகுதி இன்றி பணியாற்றி வருகின்றனர். உதாரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் துறையில் பணியாற்றி வருபவர் பொருளாதாரம் படித்தவர். ஆனால் அவர் வகித்து வரும் பதவி, எம்.பி.பி.எஸ். கல்வித்தகுதி கொண்ட நபர் பணிபுரியும் பதவி ஆகும் என வாதிட்டனர். 
இதையடுத்து நீதிபதிகள், அரசு வழக்குரைஞரிடம் இது எவ்வாறு சாத்தியம்? உயிர் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் உரிய கல்வித்தகுதி இல்லாதவர்களை நியமித்தது எப்படி எனக் கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Label