OUR CLIENTS
விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்படும் அபாயம்!
விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்படும் அபாயம்! Posted on 05-Jan-2019 விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர்  பஞ்சம் விரைவில் ஏற்படும் அபாயம்!

தியாகதுருகம், ஜன.5-

விழுப்புரம் மாவட்டத்தை பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2015 ம் ஆண்டு 66.5 செ.மீ., மழை பெய்தது. இது சராசரி அளவை விட 22.3 செ.மீ., அதிகமாகும். இதற்கு பிறகு பருவமழை பெய்யாமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. வரலாறு காணாத வறட்சி 2016 ம் ஆண்டு ஏற்பட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அதைத்தொடர்ந்து 2017 ம் ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இருப்பினும் நீர்நிலைகளுக்கு ஓரளவு தண்ணீர் கிடைத்தது. 
இந்நிலையில் 2018 ம் ஆண்டு முழுவதும் கனமழை என்பது மாவட்டத்தில் பெய்யாமல் போனது. தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா மாவட்டத்தில் மிக கனமழையை கொடுத்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பியது. இத்தருணத்தில் வெறும் தூறல் மட்டுமே இப்பகுதிக்கு கிடைத்தது. வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவை விட 12 சதவீதம் அதிகமாக பெய்யும் என்று வானிலை மையம் கணித்தது. இதற்கு எதிர்மாறாக விழுப்புரம் மாவட்டத்திற்கு முக்கிய மழை ஆதாரமான வடகிழக்கு பருவமழை முற்றிலும் பெய்யாமல் ஏமாற்றியுள்ளது. வடகிழக்கு பருவமழை சராசரியாக 44.2 செ.மீ., வரை பெய்யவேண்டும். 
அப்போதுதான் அணை, ஏரி, குளங்கள் நிரம்பி நீர்வளம் பெருகி விவசாயம் செழிக்க வழிவகுக்கும்.இதுவரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 33.6 செ.மீ., அளவு பதிவாகியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 40 சதவீதம் கூட பெய்யவில்லை. கல்வராயன் மலையில் பெய்த ஓரளவு மழையால், கோமுகி அணை முழு கொள்ளளவான 46 அடியில் 40 அடி நீர் வரத்து கிடைத்து பாசனத்திற்கு திறக்கப்பட்டது.மணிமுக்தா, வீடூர் அணைகள் வெறும் குட்டைபோல் பரிதாபமாக காட்சியளிக்கிறது. 
இதன் காரணமாக ஆயக்கட்டு பாசனநிலங்களில் விவசாயம் முடங்கியுள்ளது. 'கஜா' புயல் உருவான போது தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தை தாக்கும் என்று கணிக்கப்பட்டது.அதன் பிறகு திசைமாறி வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இத்தருணத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது.அதைத்தொடர்ந்து உருவான 'பெய்ட்டி' புயல் ஆந்திராவை நோக்கி சென்றதால், மாவட்டத்தில் தூறல் கூட விழவில்லை. 
டிசம்பர் மாதத்துடன் வட கிழக்கு பருவமழை முடியும் என்பதால் இனி கனமழைக்கு வாய்ப்பு இருக்காது.மாவட்டத்தில் உள்ள 2,000 ஏரிகளில் 95 சதவீதம், நீர் இன்றி வறண்டு கிடப்ப தால் நிலத்தடி நீர்மட்டம் உயர வழியின்றி போனது. இதன் காரணமாக ஏரிகளின் ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயிர்சாகுபடிக்கு வழியின்றி போனது. கிணற்று நீர் பாசனம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மாவட்டத்தின் நெல் சாகுபடி பரப்பு பாதியாக குறைந்து விட்டது. 
ஆண்டு பயிரான கரும்பை இனி காப்பாற்றுவது எப்படி என்று புரியாமல் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். ஆறுகள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக நீரோட்டமின்றி வறண்டு கிடப்பதால் ஆற்றுபடுகையில் விவசாயம் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக கோடையில் குடிநீருக்கு கடும் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மாவட்டத்தின் முக்கிய தொழிலான விவசாயம் முடங்கும் நிலை உருவாகியுள்ளதால், விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Label