OUR CLIENTS
உயர் அழுத்த மின்பாதை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள்
உயர் அழுத்த மின்பாதை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள் Posted on 05-Jan-2019 உயர் அழுத்த மின்பாதை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகோள்

சென்னை, ஜன.5-

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் விவசாயி களின் விளைநிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரப் பாதை அமைப்பது தொடர்பாக அரசுக்கும், விவசாய அமைப்புகளுக்கும் இடையே சென்னையில் நடந்த பேச்சு தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சி யளிக்கிறது. விவசாயி களின் வாழ்வாதாரம் சார்ந்த இந்தப் பிரச்சினையை மத்திய அரசின் நிலையிலிருந்து பாராமல், விவசாயிகளின் நிலையிலிருந்து தமிழக அரசு பார்க்க வேண்டும்.
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும், பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களின் வழியாக 16 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்பாதை திட்டங்களின் பெரும் பகுதி  விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை. உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த நிலங்களை எதற்காகவும் விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்தியும் எந்தப் பயனும் கிடைக்காத நிலையில், அடுத்தகட்டமாக  சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதாக  அறிவித்திருந்தனர். எனினும் தமிழக அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு மின்துறை அமைச்சர் தங்கமணியுடன் பேச்சு நடத்தினார்கள். வேளாண் விளைநிலங்களில் இதுவரை அமைக்கப்பட்ட மின் கோபுரங்களுக்கு மாத வாடகை வழங்க வேண்டும்; இனி புதிதாக மின் கோபுரங்களை அமைக்கக் கூடாது என விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகளின் முதல் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்ட மின்துறை அமைச்சர், அதுபற்றி மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இரண்டாவது கோரிக்கையை ஏற்க முடியாது என்று நிராகரித்து விட்டார். அதனால் தான் பேச்சு தோல்வியடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து காத் திருப்புப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், உயர் அழுத்த மின்பாதையை நிலத்திற்கு அடியில் அமைப்பது தொழில்நுட்ப ரீதியில்  சாத்தியம் என்பதை அரசே ஒப்புக்கொண்டுள்ளது. நிலத்திற்கு அடியில் மின்பாதை அமைக்க கூடுதலாக செலவாகும் என்பது தான் அரசின் தயக்கத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த செலவு ஒரு பொருட்டல்ல. மத்திய பொதுத்துறை மின் நிறுவனங்கள் லாபத்தில் இயங்கி வரும் நிலையில், அவற்றால் இந்த செலவை தாங்கிக் கொள்ள முடியும். கொங்கு மண்டலத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பாதைகள் அமைக்கும் சிக்கலில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்பட்டது. அதே நிலைப்பாட்டை இப்போதும் அரசு எடுக்க வேண்டும்.
உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை அரசு மீண்டும் அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு களையும், வழிகளையும் தமிழக ஆட்சியாளர்கள் அணுக வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Label