OUR CLIENTS
வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளால் பல கோடி இழப்பு!
வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளால் பல கோடி இழப்பு! Posted on 07-Jan-2019 வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளால் பல கோடி இழப்பு!

வேலூர் , ஜன.7-

தமிழகத்தில் இன்றும் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்குவதால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

தமிழகத்தில் நுகர்பொருள் வாணிபக்கழகம், அமுதம் நியாய விலைக்கடைகள், கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்களின் நியாய விலைக்கடைகள் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசியை தவிர்த்து பாமாயில், சர்க்கரை, பருப்பு மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதிலும் சுமார் 2 கோடி ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் வினியோகம் செய்ய 34 ஆயிரத்து 686 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 25,532 முழு நேர ரேஷன் கடைகளும், 9,154 பகுதி நேர ரேஷன் கடைகளும் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,249 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 1,062 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளன. இதில் சொந்த கட்டிடங்களில் 363 ரேஷன் கடைகளும், வாடகை கட்டிடங்களில் 518 ரேஷன் கடைகளும் உள்ளன. இவற்றில் 145 கற்பகம் ரேஷன் கடைகளில் சொந்த கட்டிடத்தில் 21 கடைகளும், வாடகை கட்டிடத்தில் 49 கடைகளும் இயங்கி வருகின்றன. அதேபோல் 42 அமுதம் ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 40 கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. இவ்வாறு வேலூர் மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் 607 ரேஷன் கடைகளுக்கு சாராசரியாக ஒரு கடைக்கு வாடகையாக தோராயமாக ரூ.3,000 வழங்கப்படுவதாக கணக்கிட்டால் 607 கடைகளுக்கும் மாத வாடகையாக மட்டும் ரூ1.82 லட்சம் செலவாகிறது.  இது ஆண்டுக்கு ரூ.2.18 கோடி ஆகும். 
இதேபோல் தமிழகம் முழுவதும் வாடகை கட்டிடங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு பல கோடி இழப்பு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. பல்வேறு திட்டங்களுக்கு அரசு சார்பில் கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கப்படும் நிலையில், ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டாமல் மெத்தனம் காட்டுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இனியாவது வாடகை கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இயங்கும் ரேஷன் கடைகளில் சொந்த கட்டிடங்களை கொண்டு இயங்கும் ரேஷன் கடைகளில் கழிவறை வசதி என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் பணிபுரியும் 30 சதவீத பெண் விற்பனையாளர்கள் பல்வேறு உடல் உபாதைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று அவர்களிடம் அனுமதிபெற்று இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ரேஷன் கடைகளில் பணியாற்றும் பெண்கள் மட்டுமல்லாது, அங்கன்வாடிகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கும் அதே நிலைதான் உள்ளது.

Label